பாலசோர்: ஒடிசாவில் கணவன் – மனைவி குடும்ப பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி, தொடர்ந்து 79 நாட்களாக தனது குழந்தையின் முன்னிலையில் இளம்பெண்ணை ரூமில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் ஜலேஸ்வர் அடுத்த ராய்பனாய் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், நீலமணி ஜெனா என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணமான ஆறு மாதங்களிலேயே தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆனால் இருவருக்கும் இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளது. மகனுடன் ஒத்துப் போகாத தனது மருமகளை, மாமியார் சித்ரவதை செய்யத் தொடங்கினர். பின்னர் தனது மருமகளுக்கு பித்து பிடித்துவிட்டதாக கூறி, புருசோத்தம்பூரைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவர் நீலமணியின் பிரச்னைகளைத் தீர்க்க சம்மதம் தெரிவித்தார். மேலும், அந்தப் பெண்ணை தன்னுடன் ‘செக்ஸ்’ வைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தால், அவரது பிரச்னைக்கு உடனே தீர்வு கிடைத்துவிடும் என்றும் கூறியுள்ளார். இதைக்கேட்ட அந்தப் பெண்ணின் மாமியார், தனது மருமகளை மந்திரவாதியுடன் உடல் உறவை ஏற்படுத்திக் கொள்ள வற்புறுத்தினார். ஆனால் அந்தப் பெண் சம்மதிக்கவில்லை. இதையறிந்த மந்திரவாதி, தன்னுடன் நீலமணி உறவு வைத்துக் கொள்ளவில்லை என்றால் இறந்துவிடுவார் என்றும், குடும்பத்திற்கு தீமைகள் ஏற்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளார். தொடர்ந்து அந்தப் பெண் மறுப்பு தெரிவிக்க, தனது மருமகளையும் மந்திரவாதியையும் ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு மாமியார் சென்றுவிட்டார். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட மந்திரவாதி, அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். அந்தப் பெண்ணும் அந்த சாமியாரிடம் இருந்து தனது மாமியார் வீட்டுக்கே தப்பி வந்தது. சில வாரங்களுக்குப் பிறகு, மீண்டும் அந்த மந்திரவாதியிடம் மருமகளை மாமியார் அழைத்துச் சென்றார். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு மயக்க மருந்தை கொடுத்த மந்திரவாதி, அவரை தனி அறையில் பூட்டிவைத்தார். அந்தப் பெண் சுயநினைவு பெற்றபோது, பூட்டிய அறையில் தனது இரண்டு வயது மகனுடன் தான் அடைத்து வைத்திருப்பதை உணர்ந்தார். அதன்பின்னர் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை ெதாடர்ந்து 79 நாட்கள் பூட்டிய அறையில் வைத்து, அவரது குழந்தையின் முன்னிலையில் மந்திரவாதி பாலியல் பலாத்காரம் செய்தார். இந்நிலையில் கடந்த வாரம் வழக்கம் போல் மந்திரவாதி அந்தப் பெண்ணின் அறையை வெளியே பூட்டினார். ஆனால் அவரது செல்போனை போனை தவறுதலாக அந்த அறைக்குள்ளேயே வைத்துவிட்டு சென்றுவிட்டார். அந்த செல்போனை எடுத்து, தனது பெற்றோரின் குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொண்ட அந்தப் பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகளை தெரிவித்தார். தொடர்ந்து தன்னையும், தனது குழந்தையையும் மீட்டுச் செல்லுமாறு கதறி அழுதார். உடனே அவர்கள் கடந்த ஏப்ரல் 28ம் தேதி மொராடா போலீசாரின் துணையுடன், அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த அறைக்கு சென்றனர். அங்கிருந்த அந்தப் பெண்ணையும் அவரது குழந்தையையும் மீட்டனர். மந்திரவாதியின் தொடர் சித்ரவதையால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு உடலில் காயங்கள் இருந்தன. மேலும் அந்தப் பெண்ணின் இரண்டு வயது மகனையும் தாக்கியதால், சிறுவனின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் அந்தப் பெண்ணையும், குழந்தையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மந்திரவாதி எஸ்.கே.டோராப், மாமியார் கீதா ராணி ஜெனா, மாமனார் பூர்ண சந்திர ஜெனா, மைத்துனர் சூர்யமணி ஜெனா ஆகியோர் மீது ஐபிசி பிரிவு 498-ஏ, 294, 323, 342, 417, 109, 376(2)(என்), 506 மற்றும் 34, வரதட்சணை தடைச் சட்டம் 1961 பிரிவு 4, சூனிய தடுப்புச் சட்டம் 2013-இன் பிரிவு 5 மற்றும் பிரிவு 6-இன் கீழ் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளிகளான மந்திரவாதி எஸ்.கே.டோராப், மாமியார் கீதா ராணி ஆகியோரை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சப்பை கட்டும் பெண் அமைச்சர்பாலியல் பலாத்காரம் குறித்து சிலர் கூறும் கருத்துகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆந்திரப் பிரதேச உள்துறை அமைச்சர் தனேதி வனிதா, சமீபத்தில் அம்மாநில ரயில் நிலையத்தில் நடந்த கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், ‘குற்றம் சாட்டப்பட்டவருக்கு பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் எண்ணம் முதலில் இல்லை. உளவியல் காரணங்களுக்காகவோ அல்லது வறுமை காரணமாகவோ பாலியல் பலாத்காரம் நடந்துள்ளது’ என்றார். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு அமைச்சர் தனேதி வனிதா இப்படி கருத்து தெரிவித்ததை, எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர். நாடு முழுவதும் இதேபோல் ஆளுங்கட்சியை சேர்ந்த தலைவர்கள் பாலியல் பலாத்கார விவகாரத்தை கண்டிக்காமல், அதனை நியாயப்படுத்தும் விதமாக பேசிவருவது அவ்வப்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.