சென்னை:
கல்பாக்கத்தில் கடந்த 1985ம் ஆண்டு அணுமின் நிலையம் அமைக்கப்பட்டது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த அணுமின் நிலையத்தை கட்ட புதுப்பட்டிணம் உள்ளிட்ட கிராமமக்கள் நிலம் கொடுத்தனர்.
அப்போது இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு அவர்கள் கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த உறுதிமொழி எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் வேலைவாய்ப்பு அனைத்தும் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அணு மின் நிலையம் கட்ட நிலம் வழங்கிய கிராம மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து புதுப்பட்டிணம் கிராமபஞ்சாயத்து தலைவர் காயத்திரி தனபால் மற்றும் கிராம மக்கள் கூறியதாவது:
அணுமின் நிலையத்தில் வேலைக்கு சேர எழுத்து தேர்வு, மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இங்கு சி பிரிவில் பிளம்பர் மற்றும் எலெக்ட்ரீசியன் பணிக்கான தேர்வு இந்தியில் நடத்தப்பட்டது.
இதனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்த தேர்வை எழுத முடியாமல் போய் விட்டது. அவர்களால் இந்த வேலையில் சேர முடியவில்லை.
ஆனால் வடமாநிலத்தை சேர்ந்த 95 சதவீதம் பேருக்கு வேலை கிடைத்து உள்ளது. இது எங்களது நிலம். ஆனால் எங்கள் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு மொழி பிரச்சினையால் வேலை மறுக்கப்பட்டு இருக்கிறது.இது எந்த வகையில் நியாயம்.
அந்த நிறுவனம் உறுதி அளித்ததை போல் புதுப்பட்டிணம் கிராமத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து அணுமின் நிலைய அதிகாரிகள் கூறும் போது, நிலம் வழங்கிய கிராம மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறோம். மாணவர்களுக்கு நுழைவு தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் எங்களது விஞ்ஞானிகள் மூலம் நடத்தி வருகிறோம்.
சுற்று வட்டாரத்தில் இருந்து அதிக விண்ணப்பங்கள் வருவதில் வேலை. இதன் காரணமாகவும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது குறைந்துள்ளது. வேலை வாய்ப்புக்கான தேர்வினை தமிழில் நடத்துவதற்கும் ஆலோசனை செய்து வருகிறோம் என தெரிவித்தனர்.