கிரைம் கார்னர்:பெங்களூரு| Dinamalar

தட்டி கேட்ட பெண் கொலை
பெங்களூரின் கோவிந்தராஜ நகரை சேர்ந்தவர் நஞ்சம்மா, 52. இவர் மகளுடன், ரகு, 35 என்பவர் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. ஒவ்வொரு முறையும் கொலை செய்வதாக மிரட்டி வந்தார். அதே போல நேற்றும் தகராறு ஏற்பட்டது. அப்போது நஞ்சம்மாவை அரிவாளால் வெட்டி கொன்றார்.
நடுரோட்டில் எரிந்த லாரி
விஜயபுராவின் இன்டி அருகே உள்ள ஜுலகி ரோட்டில் நேற்று சென்று கொண்டிருந்த லாரி இன்ஜினில் புகை வந்தது. டிரைவர் இறங்குவதற்குள் இன்ஜினில் தீப்பிடித்து லாரி முழுவதும் பரவியது.தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். அருகில் பெட்ரோல் பங்க் இருந்தது. விரைந்து தீ அணைக்கப்பட்டதால் அசம்பவாவிதம் தவிர்க்கப்பட்டது.
பி.எம்.டி.சி., ஊழியர் தற்கொலை
ராய்ச்சூர் அருகே உள்ள வீராபுரா கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார், 40. பெங்களூரு பி.எம்.டி.சி.,யில் டிரைவராக வேலை செய்து வந்தார்.இவரை நிர்வாகம், பணி நீக்கம் செய்திருந்தது. இதை எதிர்த்து தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணைக்கு நேற்று வர வேண்டி இருந்தது. ஆனால் பெங்களூரு வர கூட பணம் இல்லாததால் வீட்டில் நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கைதி தப்பி ஓட்டம்
கொப்பாலை சேர்ந்தவர் சந்திரகாந்த், 33. இவர் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் இவருக்கு தலையில் அடிபட்டதால் மயங்கி விழுந்தார். உடனடியாக போலீசார் பல்லாரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று அதிகாலை, கழிவறைக்கு செல்வதாக கூறியவர், அங்கிருந்து போலீசாரின் கண்ணில் படாமல் தப்பி சென்றார்.
2 கார்கள் மோதி முதியவர் பலி
சிக்கமளூரின் மூடிகரே அருகே உள்ள பெட்டதமனேயை சேர்ந்தவர் லட்சுமண் கவுடா, 65. இவர் தன் மகனுக்கு புதிய இரு சக்கர வாகனம் வாங்கி கொடுத்திருந்தார். புது வாகனத்துக்கு பூஜை போட சென்ற காரில் சென்றார். காந்திகர் என்ற இடத்தில் சென்ற போது, மற்றொரு கார் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
தலைமறைவாக இருந்தவர் சிக்கினார்
தட்சிண கன்னடாவின் மங்களூரில் உள்ள தலப்பாடியை சேர்ந்தவர் முகமது சமீர், 35. இவர் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி என எட்டு வழக்குகள் மங்களூரு போலீஸ் நிலையத்தில் உள்ளது.தலைமறைவாக இருந்த இவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
மாண்டியாவின் ஹலசூரை சேர்ந்த சசிகாந்த், 45. இவர் பெட்ரோல் பங்க் திறப்பதற்காக மாண்டியாவில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம் சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழுக்கு விண்ணப்பித்திருந்தார். இதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஹேமலதா 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் சசிகாந்த் புகார் செய்தார். நேற்று லஞ்சம் வாங்கும்போது, ஹேமலதா கைது செய்யப்பட்டார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.