இந்தூர்: மத்தியபிரதேசத்தில் இன்று அதிகாலை நடந்த தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேசம் இந்தூரில் ஸ்வார்ன் பாக் காலனியில் அமைந்துள்ள 2 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென அதிகாலை 3.30 மணியளவில் தீப்பிடித்தது. தூங்கிக் கொண்டிருந்த மக்களில் தீ விபத்தில் சிக்கியதில், 7 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த மீட்புக் குழுவினர் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘அடுக்குமாடி குடியிருப்பின் ஒவ்வொரு தளத்திலும், விதிமுறைகளின்படி தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்கள் நிறுவப்படவில்லை. கட்டிடத்தின் உரிமையாளர் அன்சார் படேலை கைது செய்துள்ளோம். அவர் மீது 304ஏ பிரிவின் கீழ் வழக்கு பதிந்துள்ளோம். குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் எரிந்துள்ளன. இதுவரை 7 பேர் தீயில் கருகி பலியாகி உள்ளனர். ஆபத்தான நிலையில் 9 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்றனர்.