புதுடில்லி:இந்தியாவில் சட்டபூர்வ திருமண வயதிற்கு முன்னதாகவே, 25 சதவீத பெண்கள் மணம் முடிப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு நிறுவனம், 2019 – 21ம் ஆண்டு வரை நடத்திய ஆய்வு அடிப்படையிலான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில், பெண்களின் சட்டபூர்வ திருமண வயது, 18. ஆண்களின் திருமண வயது, 21. ஆய்வில், 25 சதவீத பெண்களும், 15 சதவீத ஆண்களும் சட்டபூர்வ திருமண வயதிற்கு முன்னதாகவே திருமணம் செய்து கொள்கின்றனர். மேற்கு வங்கத்தில், ஐந்தில் இரு பெண்கள், அதாவது, 42 சதவீத பெண்கள் சட்டபூர்வ திருமண வயதிற்கு முன்னதாகவே மணம் முடிக்கின்றனர்.
21 வயதிற்கு முன் திருமணம் செய்யும் ஆண்களில், பீஹார், 25 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. தமிழகம், புதுச்சேரி, நாகாலாந்து மாநிலங்களில், 1 சதவீதத்திற்கும் குறைவான ஆண்களே, 21 வயதிற்கு முன் திருமணம் செய்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குடிக்கும் பெண்கள்
இந்தியாவில் மது குடிக்கும் பெண்களின் புள்ளிவிபரம், 22 சதவீத ஆண்களுக்கு 1 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது. 15-49 வயதிற்குள், புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களை பயன்படுத்துவோரில் ஆண்கள், 39 சதவீதம்; பெண்கள், 4 சதவீதம் என்ற அளவில் உள்ளதாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement