சென்னை – புதுச்சேரி – கடலூர் ரயில் திட்டம் அவசியம்!

புதுச்சேரி : புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு, கிடப்பில் போடப்பட்டுள்ள சென்னை- புதுச்சேரி- கடலுார் ரயில் பாதை திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரியின் பொருளாதாரம் சுற்றுலாவை சார்ந்தே உள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்வித்திட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் வந்து செல்வதற்கான போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது.நெரிசல் நகரம் புதுச்சேரியில் சாலை போக்குவரத்தே பிரதானமாக உள்ளது.

ஆனால், அதற்கேற்ப சாலை வசதிகளை மேம்படுத்திட இட வசதி இல்லை. சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், புதுச்சேரி ‘போக்குவரத்து நெரிசல் நகரமாக’ மாறி வருகிறது. பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட ரயில், கப்பல் மற்றும் விமான போக்குவரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது.இதை கருத்தில் கொண்டு, புதுச்சேரி – சென்னை இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து துவக்கவும், புதுச்சேரிக்கு பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் தற்போதுள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவும், அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.ரயில் சேவை அதேசமயம், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்திட ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

புதுச்சேரியில் இருந்து தென் தமிழகம் மற்றும் வட தமிழக பகுதிகளுக்கு ரயில் சேவைகள் இருந்தாலும், நேரடியாக செல்ல முடியாது. விழுப்புரம் சென்று தான் செல்ல வேண்டியுள்ளது.புதுச்சேரியில் இருந்து சென்னை செல்ல, விழுப்புரம், திண்டிவனம் என சுற்றிச் செல்ல வேண்டும். அதேபோன்று, சிதம்பரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், காரைக்கால் செல்ல வேண்டும் என்றாலும் விழுப்புரம் சென்று அங்கிருந்து கடலுார் வழியாக செல்ல வேண்டும். இப்படி பல கிலோ மீட்டர் ரயிலில் சுற்றுச் செல்வதால் காலமும், பணமும் விரயமாகிறது.ரூ.9,000 கோடி இதனை தவிர்க்க, கடந்த 2008ம் ஆண்டு, புதுச்சேரி வழியாக சென்னை – கடலுார் ரயில் பாதை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.

latest tamil news

சென்னை பெருங்குடி வரை ரயில் பாதை உள்ளது. பெருங்குடியில் இருந்து மாமல்லபுரம், கல்பாக்கம், மரக்காணம், ஜிப்மர், வேல்ராம்பட்டு ஏரிக்கரை (நியூ புதுச்சேரி சந்திப்பு), பாகூர் வழியாக கடலுாருக்கு ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு, அப்போது ரூ.9,000 கோடி மதிப்பிடப்பட்டது.சர்வே பணி இதற்காக முதல்கட்டமாக, சர்வே பணிக்கு ரூ.60 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது.

அதில், சென்னை – புதுச்சேரி இடையே சர்வே பணி 80 சதவீதம் முடிந்தது. பின், புதுச்சேரி-கடலுார் வரையிலான 22 கி.மீ., துார ரயில் பாதைக்கு கடந்த 2010ம் ஆண்டில் இருந்து 8 ஆண்டாக சர்வே பணி நடந்தது.கால தாமதத்திற்கு, ரயில்பாதை குறுக்கிடும் இடங்களை மறு ஆய்வு செய்யுமாறு 10க்கும் மேற்பட்ட முறை ரயில்வே துறைக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்தது தான் காரணம். அதனையும் ஏற்று ரயில்வே நிர்வாகம் சர்வே பணியை முடித்த நிலையில், என்ன காரணத்தினாலோ அத்திட்டத்தை, கடந்த 2018ல்,

அப்போதைய காங்., அரசு ரத்து செய்தது. அதற்கு மாற்றாக அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியகோவில் வழியாக திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு கோரிக்கை விடுத்தது.இருந்தபோதும், சென்னை – புதுச்சேரி – கடலுார் ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. புதுச்சேரியின் பிரதான பிரச்னையாக உள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட, முடக்கி வைத்துள்ள சென்னை – புதுச்சேரி – கடலுார் ரயில் பாதை திட்டத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர தற்போதைய என்.ஆர்.காங்,, – பா.ஜ., கூட்டணி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.