தனி வீடுகளில் குப்பையை தரம் பிடித்து அளிக்காவிடில் ரூ.100  அபராதம்: சென்னை மாநகராட்சி முடிவு 

சென்னை: குப்பைகளை தரம் பிரித்து அளிக்காவிடில் ரூ.100 அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதலில் நோட்டீஸ் வழங்கப்பட்டு, அதன்பிறகு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 4500 முதல் 5,000 மெட்ரிக் டன் அளவிலான குப்பைகள், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது. இந்தக் குப்பைகள் உரம் தயாரிக்கும் முறை, உயிரி இயற்கை எரிவாயு தயாரிப்பு மையம், மரக்கழிவுகள் மற்றும் தேங்காய் ஓடுகளை மறுசுழற்சி செய்ய சிறப்பு மையம், பைராலிஸ் முறையில் எரியூட்டும் மையம் ஆகிவை மூலம் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மேலும், குப்பைக் கிடங்குகளிலும் கொட்டப்படுகிறது.

மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை சேகரிக்க வீடு வீடாக செல்லும்போது 60 சதவீத பேர் மட்டுமே குப்பைகளை தரம் பிரித்து வழங்குகின்றனர். எனவே, இதை மேம்படுத்த கடந்த சில ஆண்டுகளாக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வந்தது. குடியிருப்போர் நலச் சங்கம் மூலம் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும், குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்பதால், அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சென்னை மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து அளிக்காத வீடுகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சி சார்பில் குப்பை சேகரிக்க வரும் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட வீடுகளில் குப்பையை தரம் பிரித்து அளிக்க வேண்டும் என்று தெரிவிப்பார்கள். அப்படியும் தரம் பிரித்து அளிக்காதவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டு 15 நாட்கள் வரை அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படும். இதன்பிறகும் குப்பையை தரம் பிரித்து அளிக்காதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.

தனி வீடுகளுக்கு மட்டுமே ரூ.100 அபராதம் விதிக்கப்படும். குடியிருப்புகளுக்கு ரூ.1000, அதிக குப்பை உருவாகும் இடங்களுக்கு (Bulk waste generator) ரூ.5,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். திடக் கழிவு மேலாண்மை விதிகளின்படி இந்த அபராதம் விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.