‘தமிழகத்தில் 445 கிராமங்களில் நிலவும் தீண்டாமை வன்கொடுமைகள்: மதுரை முதலிடம்’ – ஆர்டிஐ ஆர்வலர் தகவல்

மதுரை: தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமைகள் நிலவும் முதல் 10 மாவட்டங்களில் மதுரை மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாக, மதுரையைச் சேர்ந்த ‘த பேக்ட்’ (THE FACT) தரவுகள் அமைப்பு திட்ட இயக்குநரும், ஆர்டிஐ ஆர்வலருமான எஸ்.கார்த்திக் தெரிவித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது, “தமிழகம் முழுவதும் தீண்டாமையைக் கடைபிடிக்கும் 445 கிராமங்களில் தென் மாவட்டங்களில் மட்டும் 137 கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் வெளியாகியிருக்கிறது.

கடந்த 2021-ம் ஆண்டின் இறுதி நிலவரப்படி தமிழக காவல்துறையில் ADGP சமூக நீதி (ம) மனித உரிமைகள் பிரிவு அறிக்கையின்படி தமிழகத்தில் தீண்டாமை பாகுபாடு கடைபிடிக்கபடும் என்று அடையாளப்படுத்துப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை மொத்தம் 445 என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக முதல் இடத்தில் மதுரை மாவட்டம் 43, இரண்டாம் இடத்தில் விழுப்புரம் 25, அதற்கு அடுத்தடுத்த இடத்தில் திருநெல்வேலி 24, வேலூர் 19, திருவண்ணாமலை 18 என்கிற வரிசையில் இடங்களை பிடித்துள்ளன.

கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கிராமங்கள்: இந்த ஆண்டு (2022), கடைசி இடத்தில் ஒரே ஒரு பகுதியுடன் சென்னை இடம்பெற்றுள்ளது. மற்றொரு பக்கம் தீண்டாமை வன்கொடுமைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கிராமங்கள் என்று 341 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

இக்கிராமங்களில் தீண்டாமை ஒழிப்புதற்கான விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 2021ல் மொத்தம் 597 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. 6வது இடத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் தீண்டாமை அதிகம் நடக்கும் மதுரை மாவட்டத்தில் மிக குறைவாக வெறும் 21 விழிப்புணர்வு கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.

அதேபோல் இந்த ஆண்டு 2022 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் ADGP சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு ஏற்படுத்திய விழிப்புணர்வு கூட்டங்கள் மொத்தம் 212, அதில் தீண்டாமை வன்கொடுமைகள் முதல் வரிசையில் உள்ள மாவட்டமான மதுரையில் நடத்திய கூட்டங்கள் வெறும் 3 மட்டுமே நடந்துள்ளது.

த பேக்ட் (THE FACT) தரவுகள் அமைப்பு திட்ட இயக்குநரும், ஆர்டிஐ ஆர்வலருமான எஸ்.கார்த்திக்

இதே காலகட்டத்தில் 6-வது இடத்தில் திருச்சி மாவட்டத்தில் 28 இடங்கள் நடைப்பெற்றுன. அதாவது மதுரையைவிட கூடுதலாக 25 கூட்டங்கள் நடத்தியுள்ளனர். மேலும் தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விழிப்புணர்வு கூட்டங்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் (0) என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) அறிக்கையின்படி தமிழகத்தில் கடந்த 2009-ல் இருந்து 2018 வரையிலான வன்கொடுமை வழக்குகள் 10 ஆண்டுகளில் 27.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்பதை எச்சரித்துள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் பட்டியல் இன மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், அதைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாதிய தீண்டாமை நிலவும் கிராமங்களை கண்டறிந்து அங்கு இரு தரப்பு மக்களிடையே விழிப்புணர்வு கூட்டங்கள் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படாத நிலை உள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.

தீண்டாமை போக்க என்ன செய்யலாம்?

கார்த்திக் மேலும் கூறுகையில், ‘‘ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ADGP சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு மற்றும் சமூக நலத்துறைகள் ஆகிய மூன்று துறைகளும் இணைந்து தமிழகத்தில் தீண்டாமை வன்கொடுமைகள் அதிகம் உள்ள முதல் முதல் 10 மாவட்டங்களில் முதற்கட்டமாக அதிக எண்ணிக்கையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு சமூக நல்லிணக்க கிராமங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

தமிழக அரசு இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கப்படவேண்டும். தீண்டாமை வன்கொடுமை கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட 445 கிராமங்களை மாடல் நல்லிணக்க கிராமங்களாக உருவாக்க நடவடிக்கை எடுப்பதோடு அவ்வாறான மாடல் கிராமங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வரை ஊக்கத்தொகை பரிசு கிராம வளர்ச்சி அளித்து ஊக்கப்படுத்த வேண்டும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.