Stalin said these are hindrance of Tamilnadu development: திமுக அரசின் ஓராண்டு ஆட்சி நிறைவையொட்டி சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இரண்டு விஷயங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒராண்டை நிறைவு செய்துள்ளது. இதனையொட்டி சட்டமன்றத்தில் உரையாற்றிய ஸ்டாலின், இந்த ஓராண்டில் அனைத்தையும் செய்துவிட்டதாக சொல்ல மாட்டேன். ஆனால் ஓராண்டு காலத்திற்குள் செய்யக்கூடியதைவிட அதிகமாக செய்துவிட்டோம் என்று நிச்சயமாக சொல்ல முடியும். நாம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நாம் வேகமாக செல்ல முடியாமல் இருப்பதற்கு நிதிநிலை நெருக்கடியும், மத்திய அரசின் சில நிலைப்பாடுகளும் தான் தடையாக உள்ளது. இந்த இரண்டு தடைகள் மட்டும் இல்லாமல் இருக்குமேயானால், இன்னும் பலத் திட்டங்களை நம்மால் தீட்டி இருக்க முடியும்.
தடைகள் இல்லாத வாழ்க்கை எது? எனது வாழ்க்கையில் ஏற்பட்ட தடைகள் தான் என்னை கூர் தீட்டி இருக்கிறது. பக்குவப்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற தடைகள் காலம் காலமாக இருப்பவைதான். இந்தத் தடைகளை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கக் கூடிய எதிர்மறை சிந்தனைக் கொண்டவனாக இருக்கக் கூடியவன் நான் அல்ல. இந்த தடைகளைத் தகர்த்து வெற்றிப் பெற வேண்டும் என்ற நேர்மறைச் சிந்தனைக் கொண்டவன் நான். அத்தகைய நேர்மறையான சிந்தனைகள் தான் ஒராண்டு காலச் சாதனைகளுக்கு அடிப்படைக் காரணம் என்று மனதார நம்புகிறேன்.
இதையும் படியுங்கள்: காலை சிற்றுண்டி, தகைசால் பள்ளிகள்… 5 புதிய திட்டங்களை அறிவித்த முதல்வர்
மற்றவர்களின் பலவீனத்தை நம்பி அரசியல் செய்பவன் நான் அல்ல. எனது பலம் இலக்கில் இருக்கிறது. இலக்கை அடைவேன். இந்தியாவைப் போல் குறிக்கோள் உள்ள நாடு உலகத்தில் இல்லை. அதேநேரத்தில் குறிக்கோளுக்கும் செயல்முறைக்கும் இடையில் பெரிய அகலம் உள்ள நாடும் உலகத்தில் இல்லை என இந்தியாவின் முதல் பிரதமர் நேரு குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள். அப்படி இருக்கக் கூடாது என்பதே எனது குறிக்கோள்.
திமுகவின் தேர்தல் அறிக்கைகளில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயமாக நிறைவேற்றுவேன். என்னுடைய இலக்குக்கு திராவிட மாடல் என்று பெயர். அந்த இலக்கை அடைய பெரியாரின் கொள்கை வலிமையும், அண்ணாவின் மானுடப்பற்றும், கருணாநிதியின் விடாமுயற்சியும், அன்பழகனின் பொறுமையும் கொண்டு எந்நாளும் உழைப்பேன். தமிழ்நாட்டைக் காப்பேன். இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.