மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் இரவு விருந்து சாப்பிட்ட 150 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உணவில் விஷம் கலந்திருந்ததா என்பதை ஆய்வுசெய்ய உணவு மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் பெதூல் மாவட்டத்திலுள்ள முல்தை காவல்நிலையத்துக்குட்பட்ட பிந்த்ரை கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குறிப்பாக நிச்சயதார்த்தம் நடந்த பெண்ணுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இரவு விருந்து சாப்பிட்டபிறகு 11 மணியளவில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக 150 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக குவிந்திருக்கின்றனர். இதில் இரண்டு பேர் நிலைமை மோசமாக இருப்பதால் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அமன்வீர் சிங் பைன்ஸ் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து முல்தை மருத்துவமனை மருத்துவர் அமித் நாக்வன்ஷி கூறுகையில், நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்ட கிட்டத்தட்ட 160 பேர் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். மேலும், உணவில் விஷம் ஏதேனும் கலந்திருந்ததா என்பதை ஆய்வுசெய்ய உணவு மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM