சியோல்:
வடகொரியா தனது அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், வடகொரியா அதற்கு செவிசாய்க்காமல் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிர வைத்து வருகிறது.
தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைபர் சோனிக் ஏவுகணை என பல்வேறு வகையிலான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது. விரைவில் அணு ஆயுதத்தை சோதிக்கலாம் என்றும் யூகங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் ஒரு ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரியா கூறி உள்ளது. இந்த ஆண்டில் வடகொரியாவின் 15-வது ஏவுகணை சோதனை இதுவாகும். ஜப்பான் கடல்பகுதியை ஒட்டியுள்ள கடல் பகுதியில், நீர்மூழ்கி கப்பலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. ஆனால் ஏவுகணை எவ்வளவு தூரம் சென்றது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
வட கொரியாவின் ஏவுகணை சோதனையை ஜப்பான் ராணுவ அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. எந்தவிதமான சூழ்நிலைகளையும் கையாள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், விமானங்கள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஜப்பான் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.