சென்னை:
சட்டசபையில் இன்று நிதித்துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-
தற்போது நடைமுறையில் உள்ள பணி ஓய்வூதியத்தை, குடும்ப ஓய்வூதியமாக மாற்றம் செய்வதில் அதிக கால தாமதமும், நடைமுறைச் சிக்கல்கள் அதிகமாக உள்ளதாகவும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள செயல்பாடுகளை எளிமைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இனி வரும் காலங்களில் புதிய ஓய்வூதியதாரர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை தளத்தில் கணவன்/மனைவியின் அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். எனவே, குடும்ப ஓய்வூதியம் கோரும் நேர்வுகளில் அவர்கள் கணவன்/மனைவியின் இறப்பு சான்றிதழ் மட்டும் சமர்ப்பித்தால் போதும்.
நடப்பு ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது பயன்பாட்டில் உள்ள கூடுதலான விவரங்களை கோரும் படிவம் 14க்கு பதிலாக குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு எளிதான படிவம் மாற்றி அமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.