கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு சந்தமுக்கு பகுதியில் ஷாலிமார் என்ற அசைவ உணவகம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை பூவாத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரியா, இந்த ஹோட்டலில் பரோட்டா பார்சல் வாங்கி உள்ளார். பின்னர் அவர் தன் மகளிடம் பரோட்டா பார்சலை கொடுத்துள்ளார். மகள் பார்சலை பிரித்து சிறிது பரோட்டா சாப்பிட்டுள்ளார். பின்னர் அந்த பார்சலை தாய் பிரியாவிடம் சாப்பிட கொடுத்துள்ளார். அப்போது பரோட்டா பார்சலில் பாம்பின் தோல் இருப்பதை பிரியா பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி நெடுமங்காடு காவல் நிலையத்திலும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடமும் புகார் அளித்தார். போலீசாரும், நெடுமங்காடு நகராட்சி உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் அந்த ஹோட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினர். ஹோட்டலில் இருந்து வாங்கிய பரோட்டாவில் பாம்பு தோல் இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுபற்றி பிரியா கூறும்போது, “என் மகள் நெடுமங்காடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். தேர்வுக்காக வந்தபோது காலதாமதம் ஆகும் எனச் சொன்னதால் அந்த ஹோட்டலில் இருந்து பரோட்டா பார்சல் வாங்கினேன். என் மகள் சிறிது சாப்பிட்டுவிட்டு என்னிடம் சாப்பிடச் சொன்னாள். நான் ஒருவாய் சாப்பிட்டபோது பரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்ததை பார்த்தேன். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் வழிகாட்டுதல்படி நகராட்சி உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். உடனே அதிகாரிகள் ஹோட்டலில் ஆய்வு நடத்தி என் புகார் உண்மை என்பதை உறுதி செய்து ஹோட்டலுக்கு சீல் வைத்தனர்” என்றார்.
இதற்கிடையே, பரோட்டா பார்சல் கட்டப்பட்ட பேப்பரில் பாம்பு தோல் ஒட்டி இருந்திருக்கலாம் என ஹோட்டல் சார்பில் கூறப்பட்டது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. ஹோட்டலை சுத்தப்படுத்திவிட்டு நகராட்சியிடம் அனுமதி வாங்கிய பின்புதான் மீண்டும் செயல்பட வேண்டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு காசர்கோடு காஞ்சங்காடு மாவட்ட மருத்துவமனை கேன்டீனில் வாங்கிய வடையில் ஆயிரங்கால் அட்டை இருந்தது கண்டறியப்பட்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதுமட்டுமல்லாது காசர்கோடு பகுதியில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட தேவநந்தா என்ற 11-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் நெடுமங்காட்டில் பரோட்டா பார்சலில் பாம்பு தோல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் ஹோட்டல்களில் தொடர்ந்து இதுபோன்று நடப்பதால் கேரள சுகாதாரத்துறை பரிசோதனையை பலப்படுத்தி உள்ளது.