”பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறுவதில் இந்த சிக்கல்கள் இருக்கிறது” – பழனிவேல் தியாகராஜன்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறுவதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாக, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைப்போம் என்று கூறி வருவதாகவும், ஆனால் நிதி மேலாண்மையைப் பொறுத்தவரை இதில் சிக்கல் இருப்பதாக தெரிவித்தார். 2003-ம் ஆண்டு வரை அமலில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு ஆண்டொன்றுக்கு அரசுக்கு ரூ.24,000 கோடி வரையிலும், தனி நபரைப் பொறுத்தவரை ஆண்டொன்றுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் அரசின் சொந்த நிதியை செலவிடப்பட்டது.
ஆனால், 2004-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வரும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் என்பது முழுவதும் தனிநபர் பங்களிப்பில் இருந்து வரும் நிலையில், அதில் அரசின் பங்களிப்பாக ஆண்டொன்றுக்கு ரூ.3,205 கோடி வரையிலும், தனி நபரை பொறுத்தவரை ரூ.50,000 என்று செலவிடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
image
தனி நபர் கணக்கில் இருந்து அரசுக்கணக்குக்கு ஓய்வூதியத் தொகை செலவை மாற்றுவதில் சட்ட சிக்கல்கள் நிலவுவதாகவும், இதுவரை அரசின் கடன் சுமை ரூ.6 லட்சம் கோடியாகவும், முன்னாள் நீதிபதிகள், எம்.எல்.சி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள்., அவர்களின் குடும்ப ஓய்வூதியம் உட்பட அனைத்து வகையான ஓய்வூதியத்துக்கு மட்டும் ஆண்டொன்றுக்கு சுமாராக ரூ.39,000 கோடி நிதி செலவிடப்படுவதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார். இதற்கு மேலும் ஓய்வூதிய திட்டத்தை மாற்றுவது குறித்து முதலமைச்சரும், அவை முன்னவரும் எடுக்கும் முடிவுக்கு தாம் கட்டுப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் இருந்து வரும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வாக்குறுதியாக திமுக வழங்கியிருந்த நிலையில், ஆட்சிப்பொறுப்புக்கு வந்தப்பின் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமலாக்கம் செய்வது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய குழு அமைத்து, அந்தக்குழுவும் தனது பரிந்துரைகளை அரசிடம் வழங்கியுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதி நெருக்கடி, ஒப்பீடு பற்றி பேசியது பழைய ஓய்வூதியத்திட்டம் கைவிடப்படுகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.