அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மஹிந்த ராஜபக்சே சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற இந்த சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட மஹிந்த ராஜபக்சேவிடம் இன்னும் ஒரு வாரத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிபரின் விருப்பம் அதுவானால் அதற்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக மஹிந்த ராஜபக்சே கூறியதாகத் தெரிகிறது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் போராட்டத்தில் இருந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ராஜபக்சே அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே பிரதமர் மஹிந்த ராஜபக்சே அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் மாற்றப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர், இதில் ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
இருந்தபோதும் போராட்டம் ஓய்ந்ததாக தெரியவில்லை, இலங்கையில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்ததால் நெருக்கடி முற்றியதைத் தொடர்ந்து இன்று முதல் நாடுமுழுவதும் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது.
இதற்கு முன் கடந்த மாதம் இதேபோன்று அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டபோது ராணுவம் அழைக்கப்பட்ட நிலையில், இன்று தலைநகர் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகள் வெறிச்சோடி அமைதியாக காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.