பிரித்தானியாவை குறிவைத்த Monkeypox: எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை


பிரித்தானியாவில் மீண்டும் Monkeypox என்ற குரங்கம்மை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக நாட்டின் சுகாதார பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய நபர் சமீபத்தில் நைஜீரியா சென்று திரும்பியதாகவும், அங்கிருந்து அவருக்கு குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் சிறப்பு கண்காணிப்பில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கம்மை என்பது அரிய வைரஸ் தொற்று, இது பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒருவர் மரணமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் குரங்கம்மை மக்களிடையே எளிதில் பரவாது என்றே மருத்துவ நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நோயானது பிரித்தானியாவில் முதன்முறையாக கடந்த 2018ல் அடையாளம் காணப்பட்டது.
நைஜீரியாவிலிருந்து திரும்பிய பயணி ஒருவருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரால் NHS செவிலியர் உட்பட மேலும் இருவருக்கு பரவியது.

குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டால், காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, மூட்டு வலி மற்றும் தோல்களில் தடிப்பு, வீக்கம், நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் பரவக்கூடியது.

இந்த வைரஸ், மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள வெப்ப மண்டல மழைக்காடுகளில்தான் அதிகமாகக் காணப்படுகிறது.
நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு வைத்டிருப்போருக்கு பரவும் வாய்ப்பு இருந்தாலும், பொது மக்களுக்கு பரவும் ஆபத்து மிகக் குறைவு என்றே நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

2003ல், ஆப்பிரிக்காவில் இருந்து ஒருவகை பிராணிகளை இறக்குமதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நோய் பரவல் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது.

2018ல் பிரித்தானியாவில் மூவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர், சுமார் 50 பேர்களுக்கு பரவும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், அதன் பின்னர் குரங்கம்மை பாதிப்பால் எவரும் மருத்துவமனையை நாடவில்லை என்றே தெரியவந்துள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.