பெங்களூரு: பெங்களூருவை அடுத்துள்ள சர்ஜாப்பூரில் அம்பேத்கர் சேவா சமிதி அமைப்பின் சார்பில் ஏப்ரல் 24-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ஏ.நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அந்த கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், ‘புரட்சியாளர் அம்பேத்கர் ஹீரோ. அந்த காலத்தில் அவருக்கு வில்லன் காந்தி. இந்த காலத்தில் வில்லன் மோடி” என பிரதமர் மோடியையும் பாஜக அரசையும் விமர்சித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார்.
வில்லன், ஹீரோ
கூட்டம் முடிந்து திருமாவளவன் கிளம்பும்போது தலித் அமைப்பின் நிர்வாகி படாபட் சீனிவாஸ், “திருமாவளவன் சார், பிரதமர் மோடி வில்லன் அல்ல, ஹீரோ” என்று ஆட்சேபித்து பேசினார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையானது.
இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில், ‘‘அந்த கூட்டத்தில் நான் பாதியிலேயே விரட்டப்பட்டதாக பாஜகவினர் கூறுவது பொய்யான செய்தி. சுமார் 1 மணி நேரம் பேசினேன். எனது பேச்சை அம்பேத்கரின் பேரன் பீமாராவ் யஷ்வந்த் அம்பேத்கர் உள்ளிட்டோர் பாராட்டினர். எனக்கு பிறகு பேசிய மத்திய அமைச்சர் நாராயணசாமியை 5 நிமிடம் கூட பேசவிடாமல் கூட்டத்தினர் கூச்சல் எழுப்பினர். அதனால் அவர்தான் தனது பேச்சை சுருக்கமாக முடித்துக்கொண்டார்” என்றார்.