ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பெண்கள் தங்களது உடலை முழுவதுமாக மறைக்கும் வகையில் புர்கா அணிய வேண்டும் என தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.
தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி,
தாலிபான்
அமைப்பினர் ஆட்சி மற்றும் அதிகாரத்தை கைப்பற்றினர்.
தாலிபான் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில் தற்காலிக அரசும் அமைக்கப்பட்டு உள்ளது. தாலிபான் ஆட்சி முறைக்கு பயந்து, ஏராளமானோர் நாட்டை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். எனினும் கடந்த முறை போல் அல்லாமல், சம உரிமையுடன் ஆட்சி நடைபெறும் என, தாலிபான் அமைப்பினர் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தான்
நாட்டில் தாலிபான் அரசு அமைந்த பிறகு, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது, பெண்கள் பள்ளிகளுக்கு செல்லவும், கல்லூரிகளுக்கு செல்லவும், தனியாக வெளியே செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து கல்வி கற்கவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால் இவற்றையெல்லாம் தாலிபான் அமைப்பு கண்டு கொள்ளவே இல்லை.
ரஷ்யாவுக்கு எதிரான தடைகள் தொடரும்: அமெரிக்கா, கனடா உறுதி!
இந்நிலையில் இன்று, ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் பொது வெளியில் உடலை முழுமையாக மறைக்கும் விதமான புர்காவை அணிவது கட்டாயம் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தானின் உச்ச தலைவரான ஹிபாதுல்லா அகுன்ட்ஸ்சடா கூறியதாவது:
பெண்கள் அனைவரும் தலை முதல் பாதம் வரை மறைக்கும் புர்காவை அணிய வேண்டும். அதுவே, மரியாதையும் பாரம்பரியமும். ஷரியா சட்டத்தின் படி, முதுமை அடையாத பெண்கள் அனைவரும் கண்களைத் தவிர அனைத்து பாகங்களை மறைக்கும் விதமாக புர்கா அணிய வேண்டும். இதன் மூலம் ஆண்களின் அத்துமீறலில் இருந்து அவர்கள் தவிர்க்கப்படுவார்கள். முக்கியமான வேலை ஏதும் இல்லை என்றால் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பது நலம்.
இவ்வாறு அவர் கூறினார்.