காபூல் ,
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். தலீபான்கள் ஆட்சி அமைந்ததுமே அங்கு மிகக் கடுமையான பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என்று அந்நாட்டு மக்கள் மத்தியிலும் மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர். எனினும், தங்களின் முந்தைய ஆட்சி காலத்தை போன்று(1996- 2001) கடுமையான ஆட்சி இருக்காது என தலீபான்கள் உறுதி அளித்தனர்.
ஆனால், பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று தலீபான்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது இடங்களில் பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பாக தலீபான்கள் அரசின் மந்திரி காலித் ஹனாபி வெளியிட்ட அறிக்கையில், “ எங்களது சகோதரிகள் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார் .
தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே பெண்களுக்கு எதிரான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது என்று உத்தரவிட்ட தலீபான்கள், பெண்கள் மேல் நிலைக் கல்வி பயிலவும் தடை விதித்தனர். தலீபான்களின் இந்த நடவடிக்கை சர்வதேச சமூகத்தில், அந்நாட்டை மேலும் அந்நியப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளது. பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.