புதுடெல்லி: அவதூறு கருத்துகளை பரப்பிய புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகியை, நேற்றிரவு நீதிமன்றம் அவரை விடுவித்தது. பஞ்சாப் போலீசார் டெல்லியில் இருந்த பாஜகவின் இளைஞரணி தேசிய செயலாளர் தேஜிந்தர் பால் சிங் பக்காவை அவதூறு கருத்துகளை பரப்பிய புகாரின் அடிப்படையில் நேற்று கைது செய்தது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சன்னி சிங் புகார் அளித்த புகாரின் அடிப்படையில், அவரை போலீசார் கைது ெசய்ததற்கு பாஜக கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து, நேற்று தேஜிந்தர் பால் சிங்வின் தந்தை டெல்லி காவல்துறையை அணுகினார். ஆயுதம் ஏந்திய சிலர் தனது மகனை கடத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த மனுவை விசாரித்த துவாரகா நீதிமன்றம், தேஜிந்தர் பால் சிங்கிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு, அரியானா மாநில காவல்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து, பஞ்சாப் போலீஸ் குழுவால் கைது செய்யப்பட்ட தேஜிந்தர் பால் சிங், குருக்ஷேத்ராவில் அரியானா காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதன்பின்னர், நேற்றிரவு டெல்லியில் உள்ள மாவட்ட நீதிபதி வீட்டில் அவர் ஆஜர் படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின் அவரை விடுவிக்குமறு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். வரும் திங்கள்கிழமை அன்று அவர் வழக்கு விசாரணைக்கு மீண்டும் ஆஜராக வேண்டுமென்று தெரிவித்து அவர் விடுவிக்கப்பட்டார். அங்கிருந்து டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது அவர் கூறுகையில், ‘போலீஸ் உதவியுடன் எதையும் செய்ய முடியும் என்று நம்புபவர்களை கண்டு பாஜகவினர் பயப்பட மாட்டார்கள் என்பதை சொல்ல விரும்புகிறேன்’ என்றார்.