மயிலாடுதுறை: கோவில் காவலாளியை கொலை செய்த வழக்கு – ஓராண்டுக்குப் பின் சிக்கிய குற்றவாளி

மயிலாடுதுறையில் கடந்த ஆண்டு கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டபோது தடுத்த இரவு காவலாளியை கொலை செய்த வழக்கில் தீரன் படபாணியில் விசாரணை செய்து குற்றவாளியை கைது செய்திருக்கின்றனர் தனிப்படை போலீசார்.  

மயிலாடுதுறை பாலக்கரை பகுதியில் காவிரி ஆற்றங்கரையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான விசாலாட்சி சமேத படித்துறை விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தங்கி இரவுநேர காவலராக பணியாற்றிவந்த சாமிநாதன் (55) என்பவரை கடந்த ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதி கோயிலில் சுவர்ஏறி குதித்த மர்ம நபர் ஒருவர் கொடூரமாக தாக்கிவிட்டு கோயில் சுவாமி சன்னதி கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோ மற்றும் சில்வர் உண்டியலை உடைத்தபோது உண்டியலில் பணம் ஏதும் இல்லாததால் தப்பி ஓடினார்.

 படுகாயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சாமிநாதன் மே மாதம் 14-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி பதிவுகளை கொண்டு மர்மநபரை தேடிவந்தனர். 6 மாதங்கள் ஆகியும் குற்றவாளி பிடிபடாததால் குற்றவாளி போட்டோவை காவல்துறையினர் வெளியிட்டு குற்றவாளி குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்குவதாக அறிவித்தனர்.

image
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற என்.எஸ்.நிஷா உத்தரவின் பேரில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு சிறை சென்று விடுதலையானவர்கள் குறித்தும், சிறை தண்டனையில் இருப்பவர்கள் குறித்தும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் செல்வம், காவல் உதவி ஆய்வாளர்கள் அறிவழகன், சேதுபதி, மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு திருவாரூர், நாகப்பட்டிணம், திருச்சி  உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 18 சிறைகள் மற்றும் காவல் நிலையங்களில் விசாரணை மேற்கொண்டதில் வடூவூர், மன்னார்குடி, திருமக்கோட்டை பகுதியில் உண்டியல் திருட்டில் சிறைசென்ற தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் மருதகுடியை சேர்ந்த கோவிந்தராஜ் (42) என்பதை கண்டறிந்தனர்.

குற்றவாளியை தேடிவந்த நிலையில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இன்று சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரை சிசிடிவி பதிவின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். விசாரணையில்  காசிவிஸ்வநாதர் கோயில் காவலாளி சாமிநாதனை கொலை செய்த குற்றவாளி என்று தெரியவந்தது. குற்றத்தை ஒப்புகொண்ட கோவிந்தராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலைச் சம்பவம் நடந்து நாளை மறுநாளுடன் ஒரு வருடம் முடிவடைய உள்ள நிலையில் இப்போது குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: ”என் தந்தையே என்னை பாலியல் வன்கொடுமை செய்கிறார்” – வீடியோ எடுத்து நியாயம் கேட்ட மகள்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.