மரியுபோலை 2 நாட்களில் கைப்பற்ற ரஷ்ய படைகள் இலக்கு நிர்ணயம்| Dinamalar

லீவ்:ரஷ்யாவில் நாளை மறுநாள் வெற்றி தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்குள் உக்ரைனின் மரியுபோல் நகரை கைப்பற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 24ம் தேதி முதல் கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் ரஷ்ய படையினர் துறைமுக நகரமான மரியுபோலை கைப்பற்றுவதில் உறுதியாக உள்ளனர்.

கடந்த 2014ல் உக்ரைனுக்கு சொந்தமாக இருந்த கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா தன் வசமாக்கியது. அதற்கான வழித்தடத்தை அமைக்க ரஷ்யாவுக்கு மரியுபோல் தேவைப்படுகிறது. எனவே அதன்மீது ரஷ்யாவின் முழு கவனமும் திரும்பி உள்ளது.மரியுபோலில் அஜோவ்ஸ்டால் ஸ்டீல் ஆலை அமைந்துள்ள பகுதி மட்டும் உக்ரைன் ராணுவம் வசம் உள்ளது. எனவே அங்கு ஏவுகணைகளை வீசி ரஷ்ய படையினர் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
ரஷ்யாவில் நாளை மறுநாள் வெற்றி தின விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனிடம் ஜெர்மனியின் நாஜிப் படைகள் சரணடைந்த நாள் ஆண்டுதோறும் வெற்றி தின விழா கொண்டாடப்படுகிறது.எனவே நாளை மறுநாள் நடக்கும் வெற்றி தின விழா கொண்டாட்டத்திற்குள் மரியுபோலை கைப்பற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இலக்கு நிர்ணயித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்கிடையே ஸ்டீல் ஆலை அமைந்துள்ள பகுதியில் இருந்து அதிக அளவிலான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.