மியன்மாருக்கான இலங்கை தூதுவர் தனது கடமைகளை பொறுப்பேற்பு

மியன்மாருக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட ஜே.எம். ஜனக பிரியந்த பண்டார 2022 மே 02 ஆந் திகதி யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கடமைகளை பொறுப்பேற்றவுடன் தூதுவராலய ஊழியர்களிடம் உரையாற்றிய தூதுவர், இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான தேரவாத பௌத்தத்தின் அடிப்படையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்த அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்தார். பரஸ்பர நன்மைக்காக இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார தொடர்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

தூதுவர் ஜனக பண்டார பன்முகத் தொழில்களில் ஈடுபட்டுள்ளார். அவர் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞராவதுடன், நீதிவான், மேலதிக மாவட்ட நீதிபதி மற்றும் தனியார் வழக்கறிஞர்களின் சிரேஷ்ட சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். அவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், இலங்கையின் பொது நம்பிக்கைப் பொறுப்பாளராகவும், சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும் பணியாற்றியுள்ள அதே வேளை, ஜனாதிபதி ஆலோசகர், மாண்புமிகு பிரதமரின் பாராளுமன்ற செயலாளர் மற்றும் பாராளுமன்ற பொது மனுக்கள் குழுவின் தலைவர் உட்பட பல உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.

தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜனக பண்டார ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளதுடன், இந்த நியமனத்திற்கு முன்னர் நைஜீரியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக பணியாற்றினார்.

இலங்கைத் தூதரகம்,
யாங்கோன்
2022 மே 06

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.