பெங்களூரு,:”சாலை பள்ளங்கள் மூடுவது, குப்பை நீர்வகிப்பது, மழை வெள்ளம் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை வகிப்பது, கொரோனா நான்காம் அலைக்கு தயாராவது போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்,” என பெங்களூரு மாநகராட்சி புதிய தலைமை கமிஷனர் துஷார் கிரி நாத் தெரிவித்தார்.
பெங்களூரு மாநகராட்சி புதிய சட்டம், 2020 ல் கொண்டு வரப்பட்டது. புதிய சட்டப்படி மாநகராட்சிக்கு, தலைமை கமிஷனராக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி கவுரவ் குப்தா நியமிக்கப்பட்டார்.அவரை, கர்நாடக அரசு நேற்று முன்தினம் திடீரென இடம் மாற்றம் செய்தது. அந்த இடத்துக்கு, துஷார் கிரி நாத் நியமிக்கப்பட்டார்.
இவர், மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றார். பொறுப்பில் இருந்து விலகிய கவுரவ் குப்தா, வெள்ளி சாவி வழங்கி பொறுப்பை ஒப்படைத்தார்.பின், துஷார் கிரி நாத் கூறியதாவது:சக்தி மீறி, எதிர்பார்ப்பை மீறிய பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. மக்களுடன் இணைந்து சேவை செய்ய, அரசு வாய்ப்பளித்துள்ளது.
திறமையுடன் நிர்வகிப்பேன்.ஒவ்வொரு முடிவும், நிர்வாகத்தின் மீது எதிரொலிக்கும். ஒவ்வொரு பணியிலும் நேர்மையாக நடந்து கொண்டால், வெற்றி நிச்சயம். மக்களுடன் நேரடி தொடர்பு வைத்து கொள்ள வேண்டும். உற்சாகத்துடன் பணியாற்றுவேன். நிலுவையில் உள்ள அடிப்படை வசதிகள் துரிதமாக முடிக்கப்படும்.சாலை பள்ளங்கள் மூடுவது, குப்பை நீர்வகிப்பது, மழை வெள்ளம் ஏற்படமால் முன்னெச்சரிக்கை வகிப்பது, கொரோனா நான்காம் அலைக்கு தயாராவது
என்னுடைய தற்போதைய முன்னுரிமை.பெங்களூரு மாநகராட்சியில் பெரிய சவால்கள் உள்ளன. அதை திறம்பட எதிர்கொள்ள தயாராக உள்ளோம். மாநகராட்சியில் பணியாற்றுவது கடினம் என்பது உண்மை. ஆனால் எதற்கும் அஞ்ச மாட்டேன். அனுபவமிக்க அதிகாரிகள் உள்ளனர். அவர்களின் உதவியோடு, அடிப்படை பிரச்னைகள் முடிக்கப்படும்.
29 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளது.நாம் எந்த அளவுக்கு நேர்மையுடன் பணியாற்றுகிறோம் என்பதன் அடிப்படையில், மக்கள் நம்மை விரும்புவர்.சாலையில் சிறிய பள்ளம் ஏற்பட்டாலும், உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பெஸ்காம், குடிநீர் வடிகால் வாரியம் என அனைத்து துறைகளுடன் இணைந்து செயல்படுதல் அவசியம்.மக்களின் கஷ்டங்களை அறிந்து பணியாற்ற வேண்டும். புகார்களை துரிதமாக தீர்ப்பது முக்கியம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement