சென்னை: மே 15ந்தேதி சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட இருப்பதாக அதிமுக தலைமைக் கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவை கைப்பற்ற சசிகலா முயற்சித்து வரும் வேளையில், அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்று நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து கடந்த இரு மாதங்களாக அதிமுக உள்கட்சி தேர்தல் மற்றும் அமைப்பு தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. பல நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செயலாளர்கள், நகர, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் தற்போது உள்ளவர்களே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். காலி இடங்களுக்கு மட்டும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முதல் கிளை கழக நிர்வாகிகள் வரை தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, கட்சி ரீதியாக உள்ள 75 மாவட்டங்களுக்கும் அ.தி.மு.க.வில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தங்கள் பணியினையும் தொடங்கிவிட்டனர்.
இதையடுத்து அதிமுக, பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டப்பட வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். அதை ஏற்று வரும் 15ந்தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் வரும் 10 அல்லது 11ந்தேதி கூடி ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து வரும் 15ந்தேதி அன்று பொதுக்குழுவை கூட்டுவதற்கு வாய்ப்பு உள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக சென்னை வானகரத்தில் உள்ள பிரபல திருமண மண்டபத்தை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சசிகலாவுக்கு எதிரான அதிமுகவினரின் மனநிலையி பிரதிபடுத்தும் வகையில், செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்ட அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும், இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும், கட்சியை வலுப்படுத்துவதுடன், ஒற்றை தலைமை, 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு வியூகம் அமைப்பது உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.