ஹீரோவாக அசராமல் ஓடிக்கொண்டிருக்கிறார் சந்தானம். ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’, ‘குலுகுலு’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரக்கின்றன. இன்னொரு பக்கம் கன்னட இயக்குநர் பிரசாந்த்ராஜின் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் பெங்களூருவில் நடந்து கொண்டிருக்கிறது. படப்பிடிப்பின் இடைவேளையில் சந்தானத்துடன் ஒரு சின்ன சாட்.
வடிவேலு கம்பேக் ஆகியிருக்கார். சின்னக் கலைவாணர் விவேக் மறைந்து ஓராண்டுகள் ஆகி, இங்கே ஒரு வெற்றிடம் இருக்கு. அவங்க ரெண்டு பேரைப் பற்றி…
“விவேக் சார் என்னோட ‘சக்கபோடு போடுராஜா’வுல நடிச்சிருக்கார். அவருடைய இழப்பு தமிழ்த் திரையுலகிற்கு பெரிய இழப்புதான். அவரோட பாணி காமெடி பண்ண இங்கே யாருமே இல்ல. அவரோட காமெடிகள்ல பெரியார் சிந்தனைகளை கலந்து சொல்லியிருக்கார். அவரோட நடிக்கும் போது ஸ்பாட்ல நிறைய விஷயங்கள் பேசியிருக்கார். நல்ல மனிதர். அவருடைய இறப்பின் போது, அவரது வீட்டுக்குப் போயிருக்கேன்.
விவேக் சார் ஒரு டிராக்னா. வடிவேலு சார் வேற டிராக். அவர் கம்பேக் நல்ல விஷயம். அவர் இன்னும் நிறைய காமெடிகள் பண்ணனும். மீம்ஸ் எல்லாம் அவரை வச்சுத்தான் இன்னும் போயிட்டிருக்கு. புதுப்புது விஷயங்களை அவர் பண்ணனும். அவர் படங்கள் பார்கணும்னு எனக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. நான் ஹீரோவாகிட்டேன். அதனால என்னோட கதாபாத்திரம் தாண்டி என்னாலேயும் காமெடிக்கு போக முடியல. வடிவேலு சார் மாதிரி யாராலேயும் பண்ணமுடியாது.”
தமிழ் சினிமாவில் காமெடிக்கான இடம் குறைவாகத்தான் இருக்குனு இன்னமும் சொல்றாங்களே?
“இங்கே யாருடைய ஸ்டைலையும், இடத்தையும் யாராலுமே நிரப்பிட முடியாது. எம்.ஜி.ஆர். இருந்தார். அவருக்குப்பறம் அவரைப் போல் யாருனு பார்த்தால்… யாரும் இல்ல. அவர் இடம் இன்னும் அப்படியேத்தான் இருக்கு. அப்புறம் சிவாஜி சார் வந்தார். அவர் இடம் காலியாகத்தான் இருந்துச்சுனு சொல்லிட்டிருந்தாங்க. அப்புறம், கமல் சார் வந்தார். அப்புறம் ரஜினி சார் வந்தார். ஆனாலும் எம்.ஜி.ஆர்.சார், சிவாஜி சார் இடத்துக்கு ரீபிலேஸ்மென்ட்டா யாரையும் சொல்ல முடியாது. அதைப் போலதான் காமெடி நடிகர்களின் இடமும். ஒவ்வொரு காலகட்டத்துலேயும் ஒவ்வொருத்தர் வருவாங்க. ‘இவர் இடத்துக்கு இவர் வந்துட்டார்’ன்னு ரொம்ப வருஷமா சொல்லிட்டிருக்காங்க. ஆனா, அப்படி யாருமே வரமுடியாது. ஒவ்வொருத்தரும் யுனிக். கடவுளின் படைப்பும் அதான்.”