இந்திய நிகழ்வுகள்
புரோட்டோ பார்சலில் பாம்பு தோல்: ஹோட்டலுக்கு சீல்
திருவனந்தபுரம்,-ஹோட்டலில் வாங்கிச் சென்ற பரோட்டாவுடன் பாம்புத் தோல் இருந்தது, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, திருவனந்தபுரம் அருகே உள்ள பூவத்துாரைச் சேர்ந்த ஒரு பெண், ஹோட்டல் ஒன்றில் பரோட்டா பார்சல் வாங்கினார். வீட்டுக்கு சென்று பிரித்தபோது, பரோட்டாவுடன் பாம்புத் தோல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் போலீஸ் மற்றும் உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் கொடுத்தார்.அவர்கள் பரோட்டா பார்சலை ஆய்வு செய்து, ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, அந்த ஹோட்டலுக்கு, ‘சீல்’ வைக்கப்பட்டது.சமீபத்தில், கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் ‘சிக்கன் ஷவர்மா’ என்ற அசைவ உணவு சாப்பிட்ட மாணவி உயிரிழந்தார். இந்நிலையில், பரோட்டா பார்சலில் பாம்புத் தோல் இருந்தது, மாநிலம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண் அதிகாரி வீட்டில் சோதனை: கட்டு கட்டாக பணம் பறிமுதல்
புதுடில்லி,-ஜார்க்கண்டில், அரசு நிதி அபகரிக்கப்பட்டது தொடர்பாக, மாநில சுரங்கத் துறை செயலரின் வீடு உள்ளிட்ட 18 இடங்களில், நேற்று அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதில், 19 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது. பண மோசடிஇங்கு, குந்தி மாவட்டத்தில் பணிபுரிந்த ராம் பினோத் பிரசாத் சின்ஹா என்ற இன்ஜினியர், அரசு நிதியில் இருந்து, பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அமலாக்கத் துறையினர் பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க துவங்கினர்.விசாரணையில், சின்ஹா தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் இருந்து, 19 கோடி ரூபாயை தன் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்திருப்பது அம்பலமானது.
இதையடுத்து, மேற்கு வங்கத்தில் தலைமறைவாகி இருந்த சின்ஹாவை, 2018ல் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அவருக்கு சொந்தமான, 4.28 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. ரூ.19 கோடி பறிமுதல்இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், மாநில சுரங்கத் துறை செயலருமான பூஜா சிங்காலின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் 19 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.சின்ஹா பணியாற்றிய குந்தி மாவட்டத்தில், பூஜா சிங்கால் துணை கமிஷனராக பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக நிகழ்வுகள்
புகையிலை கடத்தல்: இருவர் கைது
கூடலுார்:கர்நாடகாவில் இருந்து, கூடலுாருக்கு கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனர்.கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து, காய்கறி வாகனங்களில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக, கூடலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ.,வெங்கடாசலம் மற்றும் போலீசார், நேற்று காலை கூடலுார் நகரில் வாகன சோதனை மேற்கொண்டனர்.அதில், மைசூருவில் இருந்து வந்த ‘பிக்-அப்’ வாகனத்தில் காய்கறிகளுடன், 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 130 புகையிலை பண்டல்கள் மூட்டையில் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்துடன் அவைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, கூடலுாரை சேர்ந்த செந்தில்குமார்,41, அசைனார்,30, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மாணவி கர்ப்பம்: மாணவர் கைது
விழுப்புரம்:பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய, கல்லுாரி மாணவர் மீது ‘போக்சோ’ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.விழுப்புரம் அடுத்த ராதாபுரம் பழைய காலனியைச் சேர்ந்தவர் அய்யனார் மகன் அருண், 19; விக்கிரவாண்டி தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.இவர் பிளஸ் 1 படிக்கும் 16 வயது மாணவியுடன் பழகியுள்ளார். இதில் அந்த மாணவி ஆறு மாதம் கர்ப்பமாக உள்ளார்.இது குறித்த புகாரின்படி, அருண் மீது விழுப்புரம் மகளிர் போலீசார் ‘போக்சோ’ எனும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
உடுமலையில் ஒரே நாளில் இரு வீட்டில் 27 பவுன் நகை கொள்ளை
உடுமலை;உடுமலையில், வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை பகுதியில், கடந்த சில வாரமாக, பூட்டியிருக்கும் வீடுகள் மற்றும் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து, பணம், நகை திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
உடுமலை, எஸ்.வி., மில் அருகே, சின்மயானந்தா நகரைச்சேர்ந்த, ஓய்வு பெற்ற கல்லுாரி பேராசிரியர் கல்யாண சுந்தரம், 62, கடந்த, 30ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, மனைவியுடன், கோவையிலுள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு மற்றும் பின் கதவு தாழ்ப்பாழ்கள், பூட்டு உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே பெட்ரூமிலிருந்த, பீரோவை உடைத்து, அதிலிருந்த, 2 பவுன் தங்கச்செயின், 4 பவுன் ஆரம், 2 தங்க வளையல், 4 மோதிரம், 6 ஜோடி தங்கத்தோடு, தங்கக்காசுகள் என, 19 பவுன் நகை திருடப்பட்டிருந்தது.
அதே போல, பெரியகோட்டை பிரிவு, மாரியப்ப கவுண்டர் லே- அவுட்டைச்சேர்ந்த, சவுந்தரராஜன், 52, இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.கடந்த, 3ம் தேதி, எரிசனம்பட்டி, வல்லக்குண்டாபுரத்திற்கு, விசேஷத்திற்கு, குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்த போது, வீடடுக்கதவு மற்றும் அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, உள்ளிருந்த, தங்கச்செயின்,மோதிரம், கம்மல் என, 8 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது.இது குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உடுமலை பகுதிகளில், தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், திருட்டுக்கும்பலை விரைந்து பிடிக்கவும் வேண்டும்.
ரூ 9 லட்சம் லஞ்சம் வாங்கிய வணிக வரி உதவி கமிஷனர் கைது
திருப்பூர், :வரி செலுத்தியதற்கான சான்றிதழ் வழங்க, 9 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற திருப்பூர் வணிக வரித்துறை அலுவலர், பெண் எழுத்தர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோவையைச் சேர்ந்தவர் குணசேகரன்; பொக்லைன், கிரேன் வாகனங்கள் இயக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். திருப்பூரில் இந்நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வந்தது. இரு ஆண்டுக்கு முன், நாமக்கல் பகுதிக்கு மாற்றி விட்டார்.கடந்த 2011 – 2017 இடைப்பட்ட காலத்தில், நிறுவனம் சார்பில் செலுத்த வேண்டிய வரியினங்கள் நிலுவையில் இருந்தன.
இது குறித்து, வணிக வரித்துறை அறிக்கையை அடுத்து அதற்கான தொகையை அவர்
செலுத்தியுள்ளார்.இந்த வரியினம் செலுத்தியதற்கான நிலுவை இல்லா சான்றிதழ் பெற வேண்டியிருந்தது.இதற்காக, குணசேகரன், திருப்பூர் – வடக்கு எண் 2 வணிக வரி உதவி கமிஷனர் ஜெய்கணேஷ், 44, என்பவரை அணுகினார்.
இந்த சான்றிதழ் வழங்க அவர், 9 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த குணசேகரன், திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் அறிவுரைப்படி, நேற்று மாலை 5:00 மணியளவில், பணத்துடன், திருப்பூர் வணிக வரி அலுவலக 3வது மாடியில் உள்ள ஜெய்கணேஷ் அறையில் சென்று, குணசேகரன் பணத்தை கொடுத்தார். அவரிடம் பணத்தை ஜெய்கணேஷ் பெற்று, அதில் குறிப்பிட்ட தொகையை, எழுத்தர் ரத்னாவிடம் கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார்
இருவரையும் பிடித்தனர்.
புாடப் புத்தகத்திலும் போலி: சென்னையில் விற்றவர் கைது
சென்னை:சென்னையில் போலியாக அச்சிடப்பட்ட, என்.சி.ஆர்.டி., பாடப் புத்தகங்களை விற்ற நபரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி கவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி., வெளியிடும் பாடப் புத்தங்களை தான், பள்ளிகளில் பயன்படுத்தப்படுகின்றன. அப்புத்தகங்களையும் போலியாக அச்சிட்டு, மர்ம நபர்கள் விற்று வருவதாக, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சென்னை பாரிமுனை பகுதியில், பஷீர் அகமது, 47, நடத்தி வரும், ‘அரபா புக் டிரேடர்ஸ்’ என்ற கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.அங்கு போலியாக அச்சிடப்பட்ட, 2.35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, எஸ்.சி.இ.ஆர்.டி., புத்தகங்கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார், இந்த மோசடிக்கு பின்னணியில் இருக்கும் நபர்கள் குறித்து, பஷீர் அகமதை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செயின் பறிப்பு: இருவர் கைது
பெ.நா.பாளையம்;நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 53. இவர் டேங்க் வீதியில் நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், ராஜேஸ்வரி கழுத்தில் இருந்த ஒன்பதரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மதுரை கவாஸ்கர்,38. இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் தர்ஷன்,21, ஆகியோரை கைது செய்தனர்.