ரஷ்யா தனது வெற்றி விழாக் கொண்டாட்டங்களுக்கான ஒத்திகையைத் துவங்கியுள்ள நிலையில், செஞ்சதுக்கத்தை சுற்றி பயங்கர அணு ஆயுதங்களைச் சுமக்கும் வாகனங்கள் பவனி வந்தவண்ணம் உள்ளன.
மேற்கத்திய நாடுகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், புடினுடைய ஆயுத பலத்தைக் காட்டும் வகையில் இன்று அந்த அணிவகுப்பு ஒத்திகை நடந்து வருகிறது.
10 அணுகுண்டுகளை சுமந்து செல்லக்கூடியது என நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ள thermonuclear RS-24 Yars ஏவுகணையைச் சுமந்தவண்ணம் வாகனங்கள் வலம் வரும் காட்சி திகிலூட்டுவதாக அமைந்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் அந்த ஏவுகணை 49.6 டன் எடை கொண்டதாகும். மணிக்கு 24,500 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடிய அந்த ஏவுகணை, 12,000 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
வேறு வகையில் கூறினால், அந்த ஏவுகணையால், லண்டன் மாநகரையோ, நியார்க் நகரையோ சில நிமிடங்களுக்குள் தாக்க முடியும்.
வரும் திங்கட்கிழமை, இரண்டாம் உலகப்போரில் நாஸி ஜேர்மனியை வென்றதன் நினைவாக ரஷ்யாவில் வெற்றிவிழாக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், அந்த RS-24 Yars ஏவுகணை மட்டுமின்றி பல்வேறு ஆயுதங்கள் தாங்கிய வாகனங்களும், ஆயிரக்கணக்கான வீரர் வீராங்கனைகளும் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளார்கள். (அப்படியிருந்தும் ஏன் கத்துக்குட்டிகளையும், விளையாட்டு வீரர்களையும் புடின் போருக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பதுதான் புரியவில்லை!).
இதற்கிடையில், உக்ரைனில் ரஷ்யப் படையினரின் அராஜகங்கள் தொடர்கின்றன. குறிப்பாக மரியூபோலில் உள்ள உருக்காலைக்குள் இருக்கும் பொதுமக்களையும் உக்ரைன் போர் வீரர்களையும் நோக்கி இன்னமும் விடாமல் தாக்கி வருகிறார்கள் அவர்கள்.