கீவ்,
உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று (மே 7) இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-
6:00 Pm
தெற்கு உக்ரேனில் உள்ள துறைமுக நகரமான ஒடேசா மீது இன்று(சனிக்கிழமை) ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக, அந்த பிராந்திய நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் செர்ஹி பிராட்சுக் தெரிவித்துள்ளார். முன்னதாக ஒடேசா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் 4 ஏவுகணைகள் தாக்கியதாகவும், அதனைத் தொடர்ந்து ஒடேசா நகரின் பல்வேறு இலக்குகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
4:30 Pm
உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள ரெயில் நிலையத்திற்கு அருகில் குவிக்கப்பட்ட “அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ உபகரணங்களை” அழித்துவிட்டதாக ரஷியா கூறியுள்ளது.கார்கிவ் நகரின் வடமேற்கில் உள்ள “போகோடுகோவ் ரெயில் நிலையத்திற்கு அருகில்” உபகரணங்கள் அழிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2.30 pm
அடால்ப் ஹிட்லருக்கு “யூத இரத்தம்” இருந்திருக்கலாம் என ரஷியாவின் உயர்மட்ட தூதர் செர்ஜி லாவ்ரோவ் கூறிய கருத்துக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின்ன் மன்னிப்பு கோரியதாக இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.
1.30 pm
உக்ரைனுக்கு மேலும் 150 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவி – அமெரிக்கா அறிவிப்பு
12.30 pm
கருங்கடலில் ரஷியாவின் ராட்சத போர்க்கப்பலை மூழ்கடிக்க உக்ரைனுக்கு ரகசிய தகவல்களை அளித்து உதவிய அமெரிக்கா!
5.00 A.M
உக்ரைனுக்கு இதுவரை 3.8 பில்லியன் டாலர் வரை இராணுவ உதவி – அமெரிக்கா
ரஷியா படையெடுப்பு தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு 3.8 பில்லியன் டாலர் வரை இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியதாக அமெரிக்கா கூறியுள்ளது.
உக்ரைனுக்கான சமீபத்திய $150 மில்லியன் அமெரிக்க பாதுகாப்பு உதவிப் பொருட்களுடன், ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து கீவ்விற்கு வாஷிங்டனின் இராணுவ உதவி சுமார் $3.8bn ஐ எட்டியுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார்.
4.00 A.M
உக்ரைனுக்கு அதிக மொபைல் ஜெனரேட்டர்களை அனுப்ப இங்கிலாந்து முடிவு
ஏற்கனவே உக்ரைனுக்கு கிட்டத்தட்ட 600 மொபைல் ஜெனரேட்டர்களை நன்கொடையாக வழங்கிய இங்கிலாந்து மேலும் 287 மொபைல் ஜெனரேட்டர்களை அனுப்பு உள்ளதாக கூறியுள்ளது. கிழக்கு உக்ரைனில் உள்ள மருத்துவமனைகள், தங்குமிடங்கள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கு கிட்டத்தட்ட 8,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க போதுமான புதிய ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படும் என்று உக்ரைனின் வணிகம், எரிசக்தி மற்றும் தொழில்துறை கூறியுள்ளது.
3.00 A.M
மரியுபோல் உருக்கு ஆலையில் இருந்து மேலும் 50 பேர் வெளியேற்றப்பட்டதாக உக்ரைன் அதிகாரி தகவல்
உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறுகையில், மரியுபோலில் உள்ள அஜோவ்டஸ் உருக்கு ஆலையில் இருந்து மேலும் 50 பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியேற்றப்பட்டதாகக் கூறினார்.
மே 07, 2.00 A.M
உக்ரைனுக்கு புதிய பாதுகாப்பு உதவியை அறிவித்தார் ஜோ பைடன்
உக்ரைனுக்கு புதிய பாதுகாப்பு உதவியை அமெரிக்க அதிபர் பிடென் அறிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு கூடுதல் பீரங்கி குண்டுகள், ரேடார்கள் மற்றும் பிற உபகரணங்களை வழங்கும் பாதுகாப்பு உதவியின் மற்றொரு தொகுப்பை நான் அறிவிக்கிறேன்,” என ஜோ பைடன் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
1.00 A.M
டான்பாசில் ரஷிய நடத்திய ஷெல் தாக்குதலில் பொதுமக்கள் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பிராந்திய ஆளுநர் கூறி உள்ளார்.
கிழக்கு உக்ரைனில் 2 போர் விமானங்களை ரஷியா சுட்டு வீழ்த்தியது
மரியுபோல் உருக்காலை மீது தாக்குதல் நீடிப்பு
கிழக்கு உக்ரைனில் 2 போர் விமானங்களை ரஷியா சுட்டு வீழ்த்தியது. மரியுபோல் உருக்காலையில் அப்பாவி மக்கள் வெளியேற்றத்தின்போதும் தாக்குதல் நீடித்தது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தபோது முதலில் தலைநகர் கீவை கைப்பற்றியாக வேண்டும் என்று கனவு கண்டது. ஆனால் உக்ரைன் படைகளில் பலத்த எதிர்ப்பால் அது கானல் நீரானது. அதைத் தொடர்ந்து மரியுபோல் நகர் மீது ரஷியா பார்வையை பதித்தது. போர் தொடுத்த நாள் முதல் அங்கு முற்றுகையிட்டது. அந்த நகரின் மீது ஏவுகணை தாக்குதலும், குண்டுவீச்சும் நடத்தி பெரும்பாலான கட்டிடங்களை சேதப்படுத்தி, உருக்குலைய வைத்தது. அந்த நகரை கைப்பற்றி விட்டதாக அதிபர் புதின் அறிவித்தபோதும், கடைசி கோட்டை போல அந்த நகரின் அஜோவ் உருக்காலை வீழாமல் இருக்கிறது.
இந்த ஆலைக்குள் 2 ஆயிரம் படை வீரர்களும், ஆயிரம் பொதுமக்களும் இருப்பதாக சொல்லப்பட்டது.
ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ்சின் நேரடி தலையீடால், பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆலையில் இருந்து மீட்கப்பட்டாலும், ஆலை மீதான தாக்குதல் தொடர்கதையாய் நீளுகிறது.
அங்குள்ள மக்களை வெளியேற்றும் சிக்கலான நடவடிக்கையின் மற்றொரு கட்டத்தில், மரியுபோலில் இருந்து கிட்டத்தட்ட 500 பேரை வெளியேற்ற முடிந்ததாக உக்ரைன் அதிபர் அலுவலக தலைவர் ஆண்ட்ரிய் யெர்மார்க் தெரிவித்தார். ஐ.நா. வின் தலையீட்டுக்காக அவர் நன்றியும் கூறினார்.
ஆலையில் சிக்கியுள்ள மக்களை மீட்கும்போது கூட போர் நிறுத்த அறிவிப்புக்கு மத்தியிலும் ரஷிய படைகள் அங்கு பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களை பயன்படுத்தி ஒரு காரை தாக்கியதாக அஜோவ் பிராந்திய படையினர் சமூக ஊடகத்தில் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் படை வீரர் ஒருவர் பலியானதாகவும், 6 பேர் காயம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1945-ம் ஆண்டு, 2-ம் உலகப்போரின்போது நாஜிக்களின் ஜெர்மனியை சோவியத் யூனியன் வெற்றி கண்டதன் வெற்றி கொண்டாட்டத்தை வரும் 9-ந் தேதி ரஷியா கொண்டாட உள்ளது. அதற்குள் மரியுபோல் அஜோவ் உருக்காலையை வசப்படுத்தி விட வேண்டும் என்பது ரஷியாவின் தற்போதைய கனவு.
கிழக்கு உக்ரைனிலும் போர் தீவிரம் அடைந்துள்ளது. அங்கு டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷிய படைகளின் 11 தாக்குதல்களை முறியடித்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
ரஷியாவின் டாங்குகளையும், கவச வாகனங்களையும் அழித்துள்ளதாகவும், கீவை கைப்பற்றும் முயற்சியை முறியடித்த பின்னர் ரஷிய அதிபர் புதினை மேலும் விரக்தியடையச ்செய்துள்ளதாகவும் உக்ரைன் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி தெரிவித்தார்.
ரெயில் நிலைய தாக்குதலுக்கு கடந்த மாதம் ஆளான கிழக்கு உக்ரைன் நகரமான கிராமடோர்ஸ்க் நகரில் இருந்த உக்ரைன் வெடிபொருள் கிடங்கை ஏவுகணை தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்தது.
மேலும், கிழக்கு லுஹான்ஸ்க் பகுதியில் உக்ரைனின் 2 போர் விமானங்களை வான்பாதுகாப்பு பிரிவினர் சுட்டு வீழ்த்தியதாகவும் ரஷிய ராணுவ அமைச்சகம் கூறியது.