சென்னையை அடுத்த பல்லாவரத்தில், வங்கியில் இருந்து பணம் எடுத்து வருபவர்களை குறிவைத்து, கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடித்த 7 பேர் கொண்ட ஆந்திர கும்பலை போலீசார் கைது செய்தனர்.
சையத் தவுலத் என்பவர், தாம் தனியார் வங்கியில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து வந்த போது, தன்னை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிச் சென்றதாக போலீசில் புகாரளித்தார்.
புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், சையத் தவுலத் பணம் எடுத்துச் சென்ற நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் பைக்கில் பின் தொடர்ந்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, சுமார் 70க்கும் மேற்பட்ட சிசிடிவிக்களை ஆய்வு செய்த போலீசார், அந்த பைக் போரூரில் நின்று கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
2 நாட்கள் கழித்து அந்த வாகனத்தை எடுக்க வந்த நபரை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், அவன் மூலம் அவனது கூட்டாளிகள் 6 பேரையும் பிடித்து கைது செய்தனர்.