பிப்ரவரி மாதம் இறுதியில் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள குந்தாப்பூர் அரசு பியூ கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வந்த 6 இஸ்லாமிய மாணவிகள் வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், `ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை’ எனக் கூறி அந்த 6 மாணவிகளும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமிய மாணவர்களுக்கு எதிராகச் சில இந்து அமைப்பினர், மாணவர்களுக்கு காவி துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட வைத்ததால் விவகாரம் பெரிதானது. சிறிது நாட்களிலேயே இந்தப் பிரச்னை கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கை பாதித்தது.
இதன் தாக்கம் அண்டை மாநிலமான கேரளா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் எதிரொலிக்கத் தொடங்கியதும், மாநில அரசுகள் சுதாரித்து சமாளித்ததால், பிரச்னைகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால், வடமாநிலங்களில் ஹிஜாப் விவகாரம் இன்றளவும் சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
இதனைத்தொடர்ந்து, ராமநவமி விழா நாடு முழுவதும் ஏப்ரல் 10-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அப்போது, இஸ்லாமிய மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் இந்து மத அமைப்பினர் ஆயுதங்களுடன் ஊர்வலம் சென்றும், கோஷங்கள் எழுப்பியும், மசூதிகளில் காவிக் கொடியை ஏற்றியதாலும் வன்முறை வெடித்ததாக சொல்லப்பட்டது. இஸ்லாமியர்கள் தரப்பில் கற்கள் வீசியதாகவும் அதனாலே கலவரம் வெடித்ததாகவும் எதிர் தரப்பில் சொல்லப்பட்டது.
இதனையடுத்து குஜராத், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் ஆகிய 4 மாநிலங்களில் கலவரமானது. இதனை அடக்க காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். அதேபோல, 4-க்கும் மேற்பட்ட நபர்கள் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரம் அடங்குவதற்குள் சட்டவிதிகளை மீறி ஆக்கிரமிப்பு செய்ததாக வடமாநிலங்களில் இஸ்லாமியர்கள் வீடுகள், கடைகள் புல்டோசர் மூலம் குறிவைத்து இடிக்கப்பட்டது.
குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் கர்கோனின் காஸ்கஸ்வாடி பகுதியில் ராம நவமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறையில், ஈடுபட்டதாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஒரு வீடு முதற்கொண்டு, 16 வீடுகள் 29 கடைகள் இடிக்கப்பட்டது. அதேபோல உத்தரகண்ட் மாநிலத்தில் ஹரித்வார், உதம் சிங் நகர், ஹல்த்வானி ஆகிய 3 இடத்தில் இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டது. இதற்கு அம்மாநில முதல்வருமான புஷ்கர் சிங் தாமி ‘சட்டவிரோதமான கட்டடங்கள் எங்குக் காணப்பட்டாலும் புல்டோசர்கள் பயன்படுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஏப்ரல் 16-ம் தேதியில் டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் உள்ள இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள வீடுகளை இடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் டெல்லி முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் பல வீடுகள், கடைகளைச் சட்டவிரோதமாக இடித்தது. சிபிஎம் தலைவர் பிருந்தா காரத் உள்ளிட்ட கட்சியினர் புல்டோசர் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விவகாரம் முடிந்துவிட்டது என்று பெரும்மூச்சு விடுவதற்குள், மகாராஷ்டிராவில் அடுத்த பூதம் கிளம்பியது. அதாவது, மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் சித்தப்பா மகனும் நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே மாநிலத்தில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகளை மே 4-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால், மசூதி முன்பாக அனுமன் பாடல்கள் ஒலிக்கப்படும் என்றும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். இதனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, டெல்லியில் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றப்பட வேண்டும் என டெல்லி பாஜக பேசத்தொடங்கியது. அதேபோல, உத்தரப்பிரதேசத்தில் எந்த வழிபாட்டுத் தளங்களிலும் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
ராஜ் தாக்கரேவின் அறிவிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. மேலும், மசூதி அருகே அனுமன் பாடலை ஒலிபரப்ப முயன்ற ஒரு சிலரையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எம்என்எஸ் கட்சியின் நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல, “ஒலிபெருக்கிகளை அகற்றும் போராட்டத்தை நிறுத்தமாட்டோம்” என்று ராஜ் தாக்கரே கூறியுள்ளது பெரும் பதட்ட சூழலை உருவாக்கியுள்ளது. சமூக விரோதிகள், ரெளடிகளாக கருதப்படும் நபர்களின் வீடுகள் புல்டோசர் வைத்து இடிக்கும் கலாசாரத்தை உ.பி., முதல்வர் யோகி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கி வைத்தார். அது தற்போது, கலவரத்தில் ஈடுபட்டதாகவும், ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் கூறி, இஸ்லாமியர்களைக் குறி வைத்து அடிக்க பயன்படுவதாகக் கூறப்படுகிறது.
ஹிஜாப் விவகாரத்தில் பெரும் தாக்கத்தைச் சந்திக்காத தமிழகம், ஒலிபெருக்கி, புல்டோசரில் சிக்குமா என்பது குறித்து அரசியல் கட்சி தலைவர்களிடம் பேசினோம்.
பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறுகையில், ” பாஜக ஆளும் மாநிலங்களில்தான் புல்டோசர், ஒலிபெருக்கி விவகாரம் இருப்பது என்பதே தவறாகும். டெல்லி, மகாராஷ்டிராவில் பாஜக ஆளவில்லை. இஸ்லாமிய மக்களுக்கு எதிரான கட்சி பாஜக என்று கூறுவது, மதநல்லிணத்தை சீரழிக்க நினைக்கும் நபர்களின் உள்நோக்க கருத்தாகும். பாஜக இஸ்லாமிய மக்களின் விரோதி என்றால், தமிழகத்தில் ஆக்கிரமிப்பு என்று கூறி ஏராளமான கோயில்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டு வருகிறது. அப்படியென்றால், திமுக இந்துக்களின் விரோதியா?.
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, ஆக்கிரமிப்பில் இருந்த 800 கோயில்களை சட்டரீதியாக அகற்றினார். அதேபோல, தற்போது உ.பி.,யில் பள்ளிகள், மருத்துவமனைகள் அருகே இருக்கும் அனைத்து வழிபாட்டுத் தளங்களில் உள்ள ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. பாஜகவைப் பொறுத்தவரை ஆக்கிரமிப்புகள், இடையூர்கள் அனைத்தும் அகற்றப்படவேண்டும். அதன்படி, தமிழகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ஒலிபெருக்கிகளையும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பாஜக இறங்கும்” என்றார்.
சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, ” மதக்கலவரம் மூலமாக பாஜக நாட்டை துண்டாட நினைக்கிறது. தமிழகத்தில் ஹிஜாப் விவகாரத்தை எடுத்து பெரிய அடியைத்தான் வாங்கியது. தற்போது ஆதீன பல்லாக்கு விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. இதுவும் எடுபடாது. காலங்காலமாக பிரார்த்தனையின்போது மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்தப்படுகிறது. ஏதோ நேற்றுதான் ஒலிபெருக்கி மாட்டியதுபோல நாடு முழுவதும் பின்புலத்திலிருந்து பிரச்னையை பாஜக உருவாக்குகிறது. இந்த விவகாரத்தைத் தமிழகத்தில் விரைவில் கிளப்புவார்கள். ஆனால், தமிழகத்தில் மதச்சார்பற்ற கூட்டணி வலுவாக உள்ளதால், பாஜகவின் சித்து வேலைகளை முறியடிக்கும். அதேபோல, மத வெறுப்பு அரசியல் தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்” என்றார் அதீத நம்பிக்கையுடன்.
ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தமிழக அரசு கடுமையான முடிவுகளை சில நேரம் எடுத்துள்ளது. ஆனால், மதம் அடிப்படையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டதில்லை. இந்த விவகாரத்தில் பிரச்னை ஏற்படவில்லை என்றாலும், கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தத் தமிழக அரசு ஏற்கனவே தடைவிதித்துள்ளது. இருந்தபோதிலும் சட்டத்துக்குப் புறம்பாக சில வழிபாட்டுத் தளங்களில் கூம்பு ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்துவது குறித்து ஆங்காங்கே சில பிரச்னைகள் வெடித்துக் கொண்டுதான் இருக்கிறது. எனவே ஒலிபெருக்கி விவகாரத்தில் மத சாயம் பூச வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது..