மலையாளத்தில் வரவேற்பையும் சர்ச்சைகளையும் ஒருசேர ஈர்த்த ‘ஜோசப்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த ‘விசித்திரன்’. தமிழிலும் அதே அளவிற்கு ஈர்க்கிறதா?
காவல்துறையிலிருந்து வி.ஆர்.எஸ் வாங்கிவிட்டு தினமும் குடியே கதி எனக் கிடக்கிறார் மாயன். ஆனாலும் அவரின் புத்திக்கூர்மையை நம்பும் காவல்துறை, சிக்கலான க்ரைம் வழக்குகளுக்கு மாயனின் உதவியை நாடுகிறது. ஒருநாள் திடீரென மாயனின் முன்னாள் மனைவி விபத்தில் மூளைச்சாவு அடைந்துவிட, ஏற்கெனவே இருளில் கிடக்கும் மாயனின் வாழ்க்கை மேலும் சூன்யமாகிறது. பிடிப்புகளற்றுத் திரியும் அவருக்கு திடீரென பொறிதட்டுகிறது. தன் மனைவியின் விபத்தை விசாரிக்கத் தொடங்குகிறார். அந்த விபத்து அடுத்தடுத்த திருப்பங்களுக்கு வழிவகுக்க, உண்மைகள் ஒவ்வொன்றாய் வெளிப்படுவதுதான் மீதிக்கதை.
மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்த கதாபாத்திரத்தில் இங்கே ஆர்.கே சுரேஷ். உடம்பை ஏற்றி இறக்கி நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். இருவரையும் ஒப்பிடுதல் தவறு என நாம் நினைத்தாலும் ஆர்.கே சுரேஷே ஜோஜுவின் உடல்மொழியை முடிந்தவரை நகலெடுக்க முயன்று, ஒப்பிடுவதற்கான வாய்ப்பை நமக்கு ஏற்படுத்தித் தருகிறார். உணர்ச்சிகளில் மட்டுமே இருவரையும் வேறுபடுத்தி பார்க்கமுடிகிறது. தனக்கேயுரிய பிரத்யேக உடல்மொழியையும் இந்த கேரக்டருக்காக அவர் வரித்துக்கொண்டிருந்தால் படத்தை இன்னமும் ரசித்திருக்கலாம்.
சினிமாவில் அதிகம் பார்த்திட முடியாத, கொஞ்சம் தவறினாலும் கண்ணியம் குறைந்துவிடும் கனமான வேடம் பக்ஸுக்கு. அவரும் முடிந்தவரை அந்தக் கதாபாத்திரத்திற்கு பங்களித்திருக்கிறார். பூர்ணா, மதுஷாலினி என இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இளவரசு, மாரிமுத்து, ஜார்ஜ் மரியான் போன்றவர்கள் கதைபோகும் போக்கில் வந்து செல்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘கண்ணே கண்ணே’ பாடல் மட்டும் கொஞ்சம் ரசிக்கவைக்கிறது. பின்னணி இசை ஏமாற்றமே. வெற்றி மகேந்திரனின் ஒளிப்பதிவு எழில்கொஞ்சம் மலைப்பிரதேசத்து அழகை அப்படியே திரையில் கடத்துகிறது.
மலையாள வெர்ஷனை இயக்கிய ஜி.பத்மகுமாரே இதற்கும் இயக்குநர் என்பதால் மூலக்கதையை சிதைக்காமல் அப்படியே தமிழுக்கு எடுத்துவந்திருக்கிறார். படத்தின் பலம் பலவீனம் இரண்டுமே அதுவே. திரைக்கதையில் அதே விறுவிறுப்பை தக்க வைத்திருந்தாலும் ரியலிஸத்திற்காக திரையில் நடிகர்கள் தேவைக்கும் அதிகமாகவே மெனக்கெடுவதால் ஒருவித செயற்கைத்தனம் படம் நெடுக இழையோடுகிறது. எல்லாரிடமும் தென்படும் வலிந்து திணிக்கப்பட்ட ஸ்லோவான பாடி லாங்குவேஜ் படத்தைவிட்டு இன்னமும் விலகிப் போகச் செய்கிறது.
சர்வதேச அளவில் பேசுபொருளாகிவரும் சிவப்புச் சந்தை பற்றிப் பேசும்வகையில் இந்தக் கதைக்கரு முக்கியமானதுதான். ஆனால் அதை விளக்கும் இறுதிக்காட்சிகளில் இன்னும் கொஞ்சம் நிதானமும் தெளிவும் இருந்திருக்கலாம். ஜான் மகேந்திரனின் வசனங்கள் சில இடங்களில் பிரசார நெடியோடு இருக்கின்றன. இந்தக் காரணங்களால் ஒரிஜினல் வெர்ஷனில் இருந்த ஜீவன் இதில் மிஸ்ஸாகிறது. அவ்வளவு தெளிவாக திட்டமிடும் மாபியா எப்படி ஒரே ஊரில் திரும்பத் திரும்ப தவறுகள் செய்யும் என்பதுபோன்ற லாஜிக் கேள்விகளும் நமக்குள் எழாமல் இல்லை.
ரீமேக்காகும் படங்கள் சில சமயம் ஒரிஜினலை நெருங்கித் தொடுவதுண்டு. சில சமயம், `ஏன் இப்படி சிதைக்கவேண்டும்?’ என நம்மை யோசிக்க வைப்பதும் உண்டு. விசித்திரன் இந்த இரண்டுக்கும் மையமாய் இருப்பதால் தப்பிப் பிழைக்கிறது.