உத்தரப் பிரதேசத்தில் தொழில்துறை அமைச்சராக இருக்கும் நந்த்கோபால் குப்தா நந்தி, அந்த மாநில அரசியலில் புதிய ஷோ மேனாக உலா வர ஆரம்பித்துள்ளார். இவரது ஸ்டைல் படு வித்தியாசமாக இருக்கிறது.
வழக்கமாக மக்களைக் கவர விதம் விதமாக, டிசைன் டிசைனாக ஏதாவது செய்வது அரசியல்வாதிகளின் வழக்கம்தான். ஆனால் இந்த நந்தி செய்யும் வேலை செமையாக இருக்கிறது. அதாவது எங்காவது சுற்றுப்பயணம் சென்றால் கட்சித் தொண்டர்களின் வீடுகளில்தான் தங்குகிறார். இரவு தங்கி விட்டு அடுத்த நாள் காலையில் எழுந்து அங்கேயே குளிக்கிறார். பின்னர் டீ, டிபனை முடித்து விட்டுக் கிளம்புகிறார்.
நந்தியின் இந்த வித்தியாசமான அப்ரோச் உ.பி. அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. அவர் குளிக்கும் வீடியோக்களும் வைரலாகியுள்ளன. இப்படித்தான் ஷாஜகான் பூர் மாவட்டத்திற்கு விசிட் அடித்த அமைச்சர் நந்தி அங்கு ஒரு தொண்டரின் வீட்டில் தங்கி குளித்த வீடியோவைப் போட்டுள்ளார்.
அதில் ஒரு வீடியோவில் அடி குழாயில் தண்ணீர் பிடித்து குளிக்கிறார் நந்தி. பாத்ரூம் தரையில் நன்றாக உட்கார்ந்து கொள்கிறார். சப்ளக் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு வாளியிலிருந்து தண்ணீரை மொண்டு மொண்டு ஊற்றி குளிக்கிறார். நன்றாக உடம்பைத் தேய்த்துத் தேய்த்துக் குளிக்கிறார். ஒருவர் அடி குழாயில் தொடர்ந்து தண்ணீர் அடித்துக் கொண்டே இருக்கிறார். இது சக் கன்ஹா கிராமத்தில் நடந்துள்ளது.
பின்னர் தலைவாரி டிரஸ் செய்து கொண்டு அவர் தயாராகும் வீடியோவையும் அமைச்சர் நந்தி போட்டுள்ளார். தனது வீடு போலவே இயல்பாக இதையெல்லாம் செய்கிறார் அமைச்சர் நந்தி.
இன்னொரு டிவீட்டில் இப்படி எழுதியுள்ளார் நந்தி: யோகி அரசுக்கும், முந்தைய அரசுகளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். இங்கு சாதாரண மனிதர்களுக்கும், யோகி அரசுக்கும் வித்தியாசமே கிடையாது. விஐபி கலாச்சாரமே இந்த அரசில் கிடையாது என்று கூறியுள்ளார் அமைச்சர் நந்தி.
கடந்த வாரம் இப்படித்தான் பரேலி மாவட்டத்திற்குச் சென்றபோது பரதுல் கிராமத்தில் வசிக்கும் ஒரு தொண்டர் வீட்டில் போய்த் தங்கி குளித்து விட்டு வந்தார். அமைச்சர் மிகவும் எளிமையாக இருப்பதாக பலரும் பாராட்டுகின்றனர். பலரது பாராட்டுக்களையும் அமைச்சர் குவித்து வருகிறார். பாஜகவுக்கும் இது நல்ல பெயரை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டிலும் இப்படித்தான் கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் மிரள வைத்தனர். ரோட்டுக் கடைகளுக்கு விசிட் அடித்து இட்லி ஊற்றுவது, தோசை வார்ப்பது, பரோட்டா போடுவது, டீ போடுவது என ஒரு கை பார்த்தனர். நடிகர் மன்சூர் அலிகான் இன்னும் ஒரு படி மேலே போய் மீன் விற்றார். கிரிக்கெட் விளையாடினார்.. இன்னும் என்னென்னவோ செய்தார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தெலங்கானாவில் ஒரு வேட்பாளர் உச்சகட்டத்துக்கே போய் விட்டார். அதாவது ஒரு குழந்தை ஆய் போன பின்னர் அதற்கு கால் கழுவி விட்டு மறக்காம ஓட்டுப் போட்ருங்க என்று மனதைக் கவ்வினார்.. இந்த வரிசையில் இப்போது உ.பி. அரசியல்வாதிகளும் இறங்கியுள்ளனர். ஆனால் இவர்கள் தேர்தலுக்குப் பிறகுதான் இந்த அதிரடியில் குதித்துள்ளனர்.