”வீட்டை விட்டு வெளியே வர பாதை இல்லை” – வீடியோ வெளியிட்ட பெண்.. நடவடிக்கை எடுத்த ஆட்சியர்!

அறந்தாங்கி அருகே குண்டகவயல் கிராமத்தில், வீட்டை விட்டு வெளியே வர வழி இல்லை என்று பெண் வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானநிலையில், வட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்து தற்காலிக பாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்டகவயல் கிராமத்தைச் சேர்ந்தவர். ராமகிருஷ்ணன். இவரின் குடும்பத்தினர் இங்கு வசித்து வரும்நிலையில், ராமகிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது மனைவி விஜி, குழந்தைகள் சபர்னா, ரோகினி, அவரது தாயார் தெய்வானை ஆகியோர் வீட்டிலிருந்து வெளியே வருவதற்கு பாதை இல்லை என சமூகவலைத் தளங்களில் வீடியோவை வெளியிட்டிருந்தனர்.
இதையடுத்து பாதையில்லாமல் தவிக்கும் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் காமராசு நேரில் ஆய்வு செய்தார். பின்னர், ராமகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு தற்போது தேவையான பாதையை அமைக்க, அவர்களின் வீட்டின் பின்புறம் இருந்த முள்வேலியை அகற்றி, பக்கத்து வீட்டு உரிமையாளர்களிடம் 6 மாத காலத்திற்கு பாதையாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என எழுத்துப்பூர்வமாக கையொப்பம் வாங்கிக் கொண்டார். 
image
மேலும் ராமகிருஷ்ணனின் மனைவி விஜி குற்றம் சாட்டிய, குண்டகவயல் பஞ்சாயத்து தலைவியின் கணவரிடமும் கையொப்பம் பெற்று, பஞ்சாயத்து தலைவர் பொறுப்பேற்று 6 மாதத்திற்குள் மாற்றுப் பாதையை நிரந்தரமாக அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் வட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்தப் பிரச்சினையில் தொடர்புடைய அனைவருமே அப்பகுதியில் உள்ள உறவினர்கள் ஆவர். பாதை தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் தற்காலிக நடவடிக்கையே வட்டாட்சியரால் எடுக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.