புனே: ‘‘நாடு 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவை கொண்டாடி வரும் இந்த வேளையில், வெளிநாட்டு பொருட்களுக்கு அடிமையாக இருப்பதை குறைக்க வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்தி மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் ஜிடோ கனெக்ட் 2022 என்ற வர்த்தக மாநாட்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வீடியோ இணைப்பு மூலம் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும். அத்துடன் வெளிநாட்டுப் பொருட்கள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். தற்போது முடிந்தளவுக்கு திறமை, வர்த்தம், தொழில்நுட்பத்துக்கு நாடு முக்கியத்துவம் அளித்து ஊக்குவித்து வருகிறது. நாட்டில் தற்போது தினமும் 12-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்படுகின்றன. சுயசார்பு இந்தியா என்பதுதான் எங்கள் பாதை, எங்கள் தீர்மானம்.
நாட்டின் கடைகோடியில் உள்ள கிராமங்கள், சிறிய பெட்டிக் கடைக்காரர்கள், சுய உதவிக் குழுவினர் என பலரும் தங்கள் பொருட்களை அரசிடம் நேரடியாக விற்கின்றனர். தற்போது 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் அரசு இணையதளத்தில் இணைந்து தங்கள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். மத்திய அரசு செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் உள்ளன.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அமைச்சர் கட்கரி பேச்சு
பின்னர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:
நாட்டின் ஏற்றுமதி தற்போது அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் குறைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டுக்குப் பின்னர், தவறான பொருளாதாரக் கொள்கைகள், ஊழல் ஆட்சி, தொலைநோக்கு இல்லாத தலைமையால் பெரும் இழப்பைச் சந்தித்தது.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டில் ஆட்சி அமைந்த பிறகு நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நம்பிக்கையான, மகிழ்ச்சியான, வளமான, சுயசார்பு சக்தி வாய்ந்த இந்தியா உருவாகி வருகிறது என மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மகாத்மா காந்தி அளித்த ‘சுதேசி’ சிந்தனையை பிரதமர் மோடி ஊக்குவித்து வருகிறார். `இந்தியனாக இரு, இந்தியப் பொருட்களை வாங்கு` என்ற கொள்கையும், சிந்தனையும் பரப்பப்பட வேண்டும்.
நீங்கள் இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன். எதை ஏற்றுமதி செய்கிறோம், எதை இறக்குமதி செய்கிறோம் என்பதன் அடிப்படையில் ஒரு கொள்கையை வகுக்க வேண்டும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.