புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தியதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கை வகித்தன. இதனால் 3-வது அலையின் போது பெரும் உயிர் இழப்புகள் தடுக்கப்பட்டன.
தற்போது சீனா உள்பட பல் வேறு நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் இது பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அதனை உடனே செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பொது இடங்களில் முக கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ரஷியா நிறுவன தயாரிப்பான ஸ்புட்னிக் பூஸ்டர் தடுப்பூசி பல்வேறு நாடுகளில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பூசியை ரஷிய நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் வினியோகிக்கும் முயற்சியில் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. இந்த நிறுவனம் பங்குதாரர்கள், மருத்துவமனை நிர்வாகங்கள் மற்றும் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
ஸ்புட்னிக் பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.