அமராவதி:
கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் கிராம வேளாண்மை உதவியாளர் (கிரேடு2) பதவிக்கு மனுதாரரின் மனுவை பரிசீலித்து 2 வாரங்களுக்குள் உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு ஆந்திர ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
ஆனால் அதிகாரிகள் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை. இதைத் தொடர்ந்து மனுதாரர் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். அப்போது அரசாங்க அதிகாரிகள் மனுதாரர் கிராம வேளாண்மை உதவியாளர் (கிரேடு2) பதவிக்கு பரிசீலிக்க தகுதியற்றவர் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் ஆந்திரா ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பை அளித்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 1 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆந்திர ஐகோர்ட்டு நீதிபதி பி.தேவனாந்த் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:
நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மீறியதற்காக சிறப்பு தலைமை செயலாளர் (வேளாண்மை) பூனம் மலகொண்டையா, அப்போதைய வேளாண்மை துறையினர் சிறப்பு ஆணையர் எச்.அருண்குமார், அப்போதைய கர்னூல் மாவட்ட கலெக்டர் ஜி.வீரபாண்டியன் ஆகியோருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
2019ம் ஆண்டு அக்டோபர் 22ந்தேதி இந்த கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளுக்கு அவர்கள் கீழ்படியவில்லை. நீதிமன்ற உத்தரவை உண்மையான உணர்வோடு செயல்படுத்த அதிகாரிகள் தவறி விட்டனர்.
இவ்வாறு நீதிபதி அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அருண்குமார், வீர பாண்டியன் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று நீதிபதி 6 வாரங்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்தார்.
மே 13 அல்லது அதற்கு முன்பு ஐகோர்ட்டு பதிவாளர் முன்பு சரண் அடையுமாறு பூனம் மல கொண்டையாவுக்கு நீதிபதி தேவனாந்த் உத்தரவிட்டார்.