புதுடில்லி,-தலைநகர் டில்லியின் நிர்வாக அதிகாரம் குறித்த வழக்கை, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மனு தாக்கல்இம்மாநில நிர்வாக அதிகாரம் தொடர்பாக, டில்லி அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.கடந்த 2018ல், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்து, காவல் துறை, சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றை தவிர, மற்ற அனைத்து துறைகளையும் டில்லி அரசு தான் நிர்வாகம் செய்யும் என தீர்ப்பளித்தது.
இதையடுத்து, டில்லி நிர்வாக மாற்றம் தொடர்பாக மத்திய அரசு சில சட்ட திருத்தங்களை செய்தது. இதை எதிர்த்து டில்லி அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் 2019ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, நீதிபதி ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதி அசோக் பூஷண் அளித்த தீர்ப்பில், ‘ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட நிர்வாக பணிகளில், டில்லி அரசுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்றார்.எதிர்ப்புநீதிபதி சிக்ரி அளித்த தீர்ப்பில், ‘இணை இயக்குனர்கள்,
அதற்கு மேற்பட்ட அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் செய்யும் உரிமை மத்திய அரசுக்கு தான் உள்ளது. மற்ற அதிகாரிகளை டில்லி அரசு நியமிக்கலாம். இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், கவர்னரின் கருத்தை கேட்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், இந்த வழக்கை, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் எனக் கோரி, மத்திய அரசு ஏப்., 28ல் மனு தாக்கல் செய்தது.
இதற்கு, டில்லி அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தது.இந்த மனுக்களை, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூரியகாந்த், ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘மத்திய அரசு மற்றும் டில்லி அரசுக்கு இடையே நிலவும் அதிகார விவகாரம் தொடர்பாக, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 11ல் விசாரிக்கும்’ என கூறப்பட்டுள்ளது.