இவ்வுலகத்தில் இழந்த வாழ்க்கையை வெவ்வேறு பிரபஞ்சங்களில் தேடும் தாய்ப்பாசம் நிறைந்த ஹாரர், ஆக்ஷன், சூப்பர்ஹீரோ சினிமா இந்த Doctor Strange in the Multiverse of Madness.
மல்டிவெர்ஸ் பயணம் மேற்கொள்ளும் அளவுக்குச் சக்தி படைத்த அமெரிக்கா சாவெஷ் என்ற டீனேஜ் பெண்ணை விதவிதமான மான்ஸ்டர்களும், டீமன்களும் துரத்துகின்றன. அவரைக் காக்க நினைக்கும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இந்த விஷயத்தில் விட்ச்கிராஃப்ட் என்னும் மாயமந்திரங்கள் இருப்பதை உணர்ந்து அதில் கைதேர்ந்தவரான வாண்டாவின் உதவியைக் கேட்கிறார். அடுத்தடுத்த திருப்பங்கள் அமெரிக்கா சாவேஷுக்கும், டாக்டர் ஸ்ட்ரேஞ்சுக்கும் நிலைமையை இன்னும் சிக்கலாக்க, அவர்களும் மல்டிவெர்ஸ் பயணம் மேற்கொண்டு வெவ்வேறு பிரபஞ்சங்களுக்குச் செல்கிறார்கள். இறுதியில் தங்களைத் துரத்தும் ஆபத்திலிருந்து அவர்கள் எப்படித் தப்பித்தார்கள் என்பதுதான் இந்த ஹாரர் சூப்பர்ஹீரோ சினிமாவின் கதை.
2016-ல் வெளியான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தின் சீக்குவலாகவும், மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் 28வது படமாகவும் வெளியாகியிருக்கிறது Doctor Strange in the Multiverse of Madness. டாக்டர் ஸ்ட்ரேஞ்சாக பெனடிக்ட் கம்பர்பேட்ச் தன் வழக்கமான கதாபாத்திர வரைவான காமெடி ஒன்லைனர், கூலான சூப்பர்ஹீரோ இமேஜை விடுத்து வெகு இயல்பாகத் திரையில் வந்து போகிறார். நடக்கும் சம்பவங்களின் பிரதிபலிப்பாக அவருக்குள்ளும் பயம், பதைபதைப்பு என எல்லாம் ஏற்படுவது அவர் கதாபாத்திரத்தின் பரிணாம வளர்ச்சி என்றே சொல்லலாம். அது மட்டுமின்றி, வெவ்வேறு விதமான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் கதாபாத்திரங்களுக்கு அதற்கேற்ற வகையில் வித்தியாசங்களைப் புகுத்தியும் நடித்துள்ளார். குறிப்பாக அந்த ஜோம்பி ஸ்ட்ரேஞ்ச் அட்டகாசம்!
ஆனால், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் டைட்டில் ரோலாகவே இருந்தாலும், அவரையே ஓவர்டேக் செய்வது எலிசபெத் வொல்சனின் மிரட்டல் பெர்ஃபாமன்ஸ்தான். வாண்டாவாக, தி ஸ்கார்லெட் விட்சாக பல பரிமாணங்களில் திரையில் தோன்றும் அவர்தான் படத்தின் உயிர்நாடி. டிரான்ஸ்பர்மேஷன் காட்சிகள், சண்டைக் காட்சிகளில் தன் அதீத சக்தியினால் எல்லோரையும் லெஃப்ட்டில் டீல் செய்வது என ‘வாண்டாவிஷன்’ தொடரைப் போன்றே இதிலும் தன் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார். எல்லோரையும் அலறவிடும் பாத்திரம்தான் என்றாலும், தாய்ப்பாச காட்சிகளில் அவரின் வேறொரு மனநிலையையும் சிறப்பாகவே திரையில் கொண்டு வந்திருக்கிறார்.
பெனிடிக்ட் வாங், ரேச்சல் மெக் ஆடம்ஸ், டீனேஜ் பெண் அமெரிக்கா சாவேஷாக வரும் சோச்சில் கோமெஸ் (Xochitl Gomez) எனத் துணை கதாபாத்திரங்கள் அனைத்துக்கும் முக்கியமான பங்களிப்புகள் படத்தில் இருக்கின்றன. அவற்றை அனைவருமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கிறார் இயக்குநர் சாம் ரெய்மி. அதிலும் பழைய ஸ்பைடர்மேன் படங்களுக்குப் பிறகு மார்வெல் சூப்பர்ஹீரோ படங்களின் பக்கம் கம்பேக் கொடுத்திருக்கிறார். வித்தியாசமாக தன் ஆஸ்தான ஹாரர் டெம்ப்ளேட்டையும் இந்தக் கதையினுள் புகுத்தியிருக்கிறார். அப்படியான காட்சியமைப்புகள் இந்தக் கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கின்றன. டேனி எல்ஃப்மேனின் பின்னணி இசை படத்தை வேறு தளத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது. குறிப்பாக இரண்டு டாக்டர் ஸ்ட்ரேஞ்சுகளுக்கு இடையே நடக்கும் அந்த மியூசிக்கல் சண்டைக் காட்சிக்கான பின்னணி இசை, திரைக்குப் புதிது.
ஜான் மேதிசென்னின் ஒளிப்பதிவும், அதற்கு ஏற்ற VFX மற்றும் SFX ஷாட்கள் ஐமேக்ஸ் திரையில் பிரமாண்டமாக விரிகின்றன. டாக்டர் ஸ்ட்ரேஞ்சும், அமெரிக்கா சாவேஷும் மல்டிவெர்ஸில் பயணிக்கும் அந்தக் காட்சிகள் ஒரு சிலிர்ப்பூட்டும் திரை அனுபவம்!
எதிர்பார்த்தது போலவே படத்தில் ஏகப்பட்ட புதிய சூப்பர்ஹீரோக்களின் கேமியோக்கள் இடம்பெற்றிருக்கின்றன. தற்போது இருக்கும் சூப்பர்ஹீரோக்களின் மல்டிவெர்ஸ் முகங்களாகப் புத்தம் புதிய வார்ப்புகளாக அவை வந்துபோகின்றன. அவர்களின் என்ட்ரி வரவேற்கத்தக்கது தான் என்றாலும் அவர்களை ஜஸ்ட் லைக்தட் ஃபில்லர்களாக மட்டும் பயன்படுத்தியிருப்பது சறுக்கல். வாண்டாவின் ‘தி ஸ்கார்லெட் விட்ச்’ பரிமாணத்தை அதீத சக்திவாய்ந்த ஒன்றாகக் காட்சிப்படுத்த மற்ற ஹீரோக்களை ஊறுகாயாக மட்டுமே பயன்படுத்தியிருப்பது அவர்களின் கதாபாத்திர வரைவையும், அவர்களுக்கான பின்கதைகளையும் கேலிக் கூத்தாக மாற்றியிருக்கிறது. கேமியோக்களைக் கொண்டு வர நினைத்தது அசத்தலான ஐடியாதான் என்றாலும், அவர்களுக்கான காட்சிகளை இன்னும் வலுவாக எழுதியிருக்கலாம்.
வழக்கமான மார்வெல் படங்களின் பாணியைப் பின்பற்றாமல் தான் சொல்ல வந்த கதையை தனக்கே உரியத் திரைமொழியில் எவ்வித சமரசங்களும் இன்றி சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் சாம் ரெய்மி. ‘எடர்னெல்ஸ்’, ‘ஷாங் சி’ எனத் தொடர்ந்து மார்வெல் படங்களில் இயக்குநர்களுக்கு முழு சுதந்திரம் கிடைப்பது வரவேற்கத்தக்க விஷயம். MCU படங்கள் விமர்சனங்களை ஏற்று அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராவதையே இந்த மாற்றம் பறைசாற்றுகிறது. அதே சமயம், இந்த மாற்றம் முழுக்க முழுக்க ஆக்ஷன், காமெடி என ஒரு பக்கா மார்வெல் பேக்கேஜை எதிர்பார்த்துப் போகிறவர்களுக்குச் சற்றே ஏமாற்றத்தை அளிக்கலாம். படமே கிட்டத்தட்ட 2 மணிநேரம் என்பதும் கூடுதல் ஏமாற்றமாக இருக்கலாம். ஆனால், ஒரு பெரிய ஸ்டூடியோ படத்தில் கதைக்கு வெளியே இருக்கும் காட்சிகள், வசனங்கள் என எந்த வணிக சமரசங்களும் இல்லாமல் இருப்பது ஆரோக்கியமான விஷயமே!
`அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்’ மற்றும் `ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ போன்ற படங்களின் அளவுக்கு எதிர்பார்ப்பினை இந்தப் படம் பூர்த்தி செய்யவில்லை என்றாலும், ஒப்பிடுதலைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஒரு தனிப்படமாக சூப்பர்ஹீரோ ஜானரில் ஒரு புதிய பாதையைக் கட்டமைக்கிறது இந்த டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படம். அவசியம் பெரிய திரையில் பார்க்கவேண்டிய விசுவல் ட்ரீட்!