வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் அசானி புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்க ஆகிய 3 மாநிலங்களில் வரும் செவ்வாய்க்கிழமை ( மே 10) தொடங்கி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் இந்தப் புயல் மேலும் வலுவடையக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தப் புயல் ஒடிசா, ஆந்திராவில் கரையைக் கடக்காது என்றும் மாறாக கடற்கரையை ஒட்டியே நகர்ந்து சென்று வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையானது புயலாக மாறி மணிக்கு 16 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது. இன்று காலை 5.30 மணி நிலவரப்படி புயல் வங்கக்கடலின் தென்கிழக்கே மையம் கொண்டிருந்தது. துல்லியமாகக் குறிப்பிட வேண்டுமென்றால் கார் நிகோபாருக்கு வடமேற்கில் 450 கி.மீ தொலைவிலும், போர்ட் பிளேரில் இருந்து மேற்கே 380 கி.மீ தொலைவிலும், ஆந்திராவிலிருந்து தென்கிழக்கே 970 கி.மீ தொலைவிலும், ஒடிசா மாநிலம் புரியிலிருந்து தெற்கு தென்கிழக்கே 1030 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
இந்தப் புயலால் நாளை ( மே 9) காற்றின் வேகம் மணிக்கு 105 முதல் 115 கி.மீ என்றளவில் வீசக்கூடும். ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் செவ்வாய் மாலையில் இருந்து மழை ஆரம்பிக்கும். அன்றையதினம் ஒடிசாவின் கஜபதி,கஞ்சம், புரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். புதன்கிழமையன்று ஒடிசாவின் ஜகத்சிங்பூர், புரி, குர்தா, கட்டாக், கஞ்சம் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
மேற்குவங்கத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கனமழை பெய்யக்கூடும். ஆந்திராவில் செவ்வாய், புதன்கிழமைகளில் கனமழை பெய்யும். என்று கணிக்கப்பட்டுள்ளது. 3 மாநிலங்களும் தங்களின் மீனவர்களுக்கு தனித்தனியாக வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கியுள்ளன.