தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக உருவாகியது. இந்த புயலுக்கு அசானி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த புயல் 24 மணிநேரத்தில் தீவிர புயலாக மாறி வடமேற்கு திசையை நோக்கி நகரும் எனவும், தற்போது 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல் விசாகப்பட்டினத்தில் இருந்து 970 கி.மீ. தொலைவில் மையம் கொண்டு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அசானி புயல் வட ஆந்திரா, ஒடிசா பகுதிகளில் மே 10-ந்தேதி கரையை கடக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நேற்று தமிழகத்தில் தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மிதமானது முதல் சூறாவளி காற்றுடன் கூடிய மழையும் பெய்தது.
இதற்கிடையே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாலும், புயலாக மாறுவதாலும், காரைக்கால், பாம்பன், நாகை, கடலூர் ஆகிய இடங்களில் நேற்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது.
இந்நிலையில், வங்கக் கடலில் அசானி புயல் உருவானதை குறிக்கும் விதமாக தற்போது 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை உள்பட புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.