ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு பெண்களுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றனர்.
பெண்கள் டிவி விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது, பெண் பத்திரிகையாளர்கள் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் பர்தா அணிந்துகொண்டுதான் கலந்து கொள்ளவேண்டும், ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் நீண்ட தூரம் வெளியில் செல்லக்கூடாது, பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கல் நிறுத்தம் என பெண்களுக்கு எதிரான தடை உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தாலிபன்களின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்சாதா பெண்கள் பர்தா அணிவது தொடர்பாக புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார். இது தொடர்பாக தாலிபன் அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வீட்டிலிருந்து பொது இடங்களுக்கு வரும் பெண்கள் தலை முதல் கால் வரை முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிய வேண்டும். அது பாரம்பர்யமானது மற்றும் மரியாதைக்குரியது. இளைஞர்களை சந்திக்கும்போது ஷரியா உத்தரவுகளின்படி, மிகவும் வயதான அல்லது இளைமையாக இல்லாத பெண்கள் கண்களைத் தவிர முகத்தை மறைக்க வேண்டும். பெண்களுக்கு வெளியில் முக்கியமான வேலை இல்லை என்றால் வீட்டிலேயே இருங்கள். பெண்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்காமல் இருந்தால், அவர்களுடைய நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது அரசு வேலையிலிருந்து நீக்கப்படலாம்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.