கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாஜக பேரணி நிகழ்ச்சியில் கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது:
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெறுகிறது. அனைத்து மதத்தவர், இனத்தவரையும் சமமாக பாவிப்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் சித்தாந்தம். ஆனால் கேரளாவில் நடைபெறும் ஆட்சியோ வித்தியாசமாக உள்ளது. ஒரு சமூகத்தினருக்கு மட்டும் சிறப்பு சலுகை தரும் கேரள அரசு மற்றொரு சமூகத்தினருக்கு எதையும் செய்வதில்லை.
இங்கு இஸ்லாமிய தீவிரவாதத்தை கேரள அரசு வளர்த்து வருகிறது. இஸ்லாமிய தீவிரவாதத்தின் மையமாக கேரள மாநிலம் மாறி வருகிறது. இதனால் வேறு மதத்தினர், குறிப்பாக கிறிஸ்தவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கேரளாவில் கடந்த 15 ஆண்டுகளாகவே அரசியல் கொலைகளும், வன்முறைகளும் அதிகரித்துள்ளன. கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 55 அரசியல் கொலைகள் நடந்துள்ளன. அதில் 12 கொலைகள், முதல்வர் பினராயி விஜயனின் சொந்த மாவட்டமான கண்ணூரில் நடந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கேரளாவில் 1,019 கொலைகள் நடந்துள்ளன. இடதுசாரி ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இவ்வாறு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பேசினார்.