இடதுசாரி தீவிரவாத சக்திகளுடன் காங்கிரஸ் தொடர்பு வைத்துள்ளது- மத்திய நிதி மந்திரி பேச்சு

சென்னை:
சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழ் 52 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். 
அப்போது அவர் தெரிவித்ததாவது:
நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இடதுசாரி தீவிரவாத சக்திகளுடன் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு உள்ளது. காங்கிரஸ் தலைமறைவு அரசியலில் ஈடுபட்டு வருகிறது. 
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனா தடுப்பூசி பிரச்சாரத்தை முன்னெடுத்தது. ஆனால் காங்கிரஸ்  பொதுமக்களிடையே தடுப்பூசி தயக்கத்தை உருவாக்கியது. 
காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கொரோனா தடுப்பூசி டோஸ்களை பெற்றிருக்கிறார்களா ? அது இந்திய தயாரிப்பா அல்லது வெளிநாட்டு தயாரிப்பா, அவர்கள் எப்போதுதாவது தடுப்பூசி போட்டுக் கொண்டதாக சொன்னார்களா, இப்போது கூட எங்களுக்கு அது தெரியாது.
கொரோனா காலத்தில் நமது நாட்டின் பிரதமராக மோடி இருந்ததற்காக நான் நன்றி தெரிவிக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
கொரோனா தொற்று தாக்கம் இருந்தபோதும் கூட நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 
2020, 2021 ஆம் ஆண்டுகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியின் நிலுவைத் தொகை சுமார் 78,000 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இது அனைத்து மாநிலங்களுக்கும் விரைவில் வழங்கப்படும். தமிழ்நாட்டிற்கு வழங்க  வேண்டிய நிலுவைத் தொகையை நாங்கள் வழங்கவில்லை என்று கூறுவது தவறு.
பாஜக உயர் சாதியினரை மட்டுமே கொண்ட கட்சி என்று தவறான பிரச்சாரம் முன் வைக்கப்படுகிறது. 
2014 ஆண்டு தேர்தலில் 131 பட்டியல் சாதி,  பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 66 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2019 தேர்தலில் அது 77 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கருக்கு பல நினைவிடங்களை அமைத்தது பாஜக தான்.
இந்தி திணிக்கப்படவில்லை. இந்தி கற்றுக்கொண்டு பேசினால் தவறில்லை. ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. திராவிட இயக்கம் இந்தி கற்றுக்கொள்ளும் தனிமனித உரிமையை பறித்தது. 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.