ஜம்மு: இந்திய எல்லையில் பாகிஸ்தானின் ஆளில்லாத விமானம் (ட்ரோன்) ஒன்று பறந்து வந்ததால், அதனை எல்லைப்பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். ஜம்முவில் இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகே பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்கள் அவ்வப்போது பறக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு இந்திய ராணுவம் கடுமையான எதிர்வினையை ஆற்றி முறியடித்துள்ளது. இந்நிலையில் ஜம்மு – காஷ்மீரின் அர்னியா செக்டார் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் பறந்தது. அதனை நோக்கி எல்லைப் பாதுகாப்பு படை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். அதன்பின் அந்த ட்ரோன் வந்தவழியே திரும்பிச் சென்றது. இதுகுறித்து பிஎஸ்எப் அதிகாரிகள் கூறுகையில், ‘பாகிஸ்தான் தரப்பில் இருந்து அனுப்பப்பட்ட ஆளில்லா விமானம், அர்னியா பகுதியில் காணப்பட்டது. அதையடுத்து பிஎஸ்எப் படை வீரர்கள் அந்த ட்ரோனை நோக்கி ஆறு ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். அந்த ட்ரோன், சர்வதேச எல்லையைத் தாண்டியிருக்காது. பாகிஸ்தான் எல்லைக்கு மீண்டும் திரும்பியதா? என்பது தெரியவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் தேடுதல்கள் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்கள் மற்றும் ஐஎஸ்ஐ அமைப்பினர், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை இந்திய எல்லைக்குள் கடத்த ட்ரோன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அவை முறியடிக்கப்பட்டு வருகின்றன’ என்றனர்.2 முக்கிய தீவிரவாதிகள் கைதுவடக்கு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர். பாதசாரிகள் மற்றும் வாகனங்களைச் சோதனையிட்டபோது, மேற்கண்ட இரண்டு தீவிரவாதிகளும் காரில் தப்பிச் செல்ல முயன்ற போது சிக்கினர். இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், ‘புல்வாமாவைச் சேர்ந்த அபித் அலி (27), பைசல் ஹசன் பர்ரே (21) ஆகிய இரண்டு முக்கிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, 30 லைவ் ரவுண்டுகள், ஒரு கைத்துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன’ என்றன.