நியூயார்க்,
ஜுராசிக் பார்க் என்ற ஆங்கில திரைப்படத்தில் வரும் டைனோசார்களை நாம் பார்த்திருப்போம். மிரட்டும் வகையிலான பெரிய உருவம் கொண்ட அவை, பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளன. காலப்போக்கில் அந்த உயிரினங்கள் அழிந்து விட்டன. எனினும், அவற்றின் படிமங்கள் கிடைத்து வருவது இந்த பூமியில் அவை வாழ்ந்ததற்கான சான்றுகளாக உள்ளன.
இந்நிலையில், குட்டி டைனோசார்கள் கடலை நோக்கி ஓட கூடிய அரிய காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பியூடென்கெபிடென் என்பவர் டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். இதற்காக எனக்கு ஒரு சில வினாடிகள் எடுத்து கொள்ளப்பட்டது என தலைப்பிட்டு அவர் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
அதில், நீண்ட கழுத்துடன் சாரோபோட்ஸ் வகையை சேர்ந்த இளம் டைனோசார்கள் போன்ற உருவம் கொண்ட உயிரினங்கள் கடலை நோக்கி ஓடுகின்றன. 14 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை பார்த்த பயனாளர்கள் பலர் குழம்பி போயுள்ளனர்.
அவர்களில் ஒருவர், அது நன்றாக உள்ளது. எனக்கும் சில வினாடிகள் எடுத்து கொண்டது என தெரிவித்து உள்ளார். எனினும், ஒரு சிலர் அதனை அடையாளம் கண்டுள்ளனர். அது டைனோசார்களின் கூட்டம் அல்ல.
கோவாடிஸ் அல்லது கோவாடிமுண்டிஸ் என அழைக்கப்படும் உயிரினம் அது. புரோசயோனிடே குடும்பத்தில் இருந்து வருவது. பகல் பொழுதில் இவை சுறுசுறுப்புடன் செயல்படும்.
தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, மெக்சிகோ அமெரிக்கா, தென்மேற்கு அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படும் பாலூட்டி இனங்கள் ஆகும் என ஒருவர் தெரிவித்து உள்ளார்.
இந்த வகை இனங்களில், பெரிய கோவாடிஸ் ஆனது தலை முதல் வால் முனை வரையில் 33 முதல் 69 செ.மீ. நீளம் இருக்கும். ஒரு பெரிய, வீட்டு பூனை அளவில் அவை இருக்கும். 30 செ.மீ. உயரத்துடன், 2 முதல் 8 கிலோ எடை கொண்டிருக்கும்.
கரடிகள் அல்லது ரக்கூன்களை போன்று கால் பாதங்களை கொண்டிருக்கும் இந்த கோவாடிஸ், மனிதர்களை போன்று கால்கள் முழுவதும் தரையில் படும்படி நடந்து செல்பவை ஆகும்.
இந்த வீடியோவை 98 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்துள்ளனர். 47 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் லைக் செய்துள்ளனர்.
This took me a few seconds.. 😅 pic.twitter.com/dPpTAUeIZ8
— Buitengebieden (@buitengebieden) May 4, 2022