கம்பம் வழங்குதல் நிகழ்வுடன் தொடங்கியது கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி உற்சவம்

கரூர்: கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி உற்சவம் பாரம்பரிய கம்பம் வழங்குதல் நிகழ்வுடன் இன்று (மே 8) தொடங்கியது.

கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி உற்சவம் சித்திரை கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று (மே 8ம் தேதி) தொடங்கி, வரும் ஜூன் 5ம் தேதி வரை 29 நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி கரூர் பாலம்பாள்புரத்தில் கம்பம் வழங்கும் நிகழ்வு இன்று (மே 8ம் தேதி) நடைபெற்றது.

3 கொப்புகள் கொண்ட வேப்ப மரம் பரம்பரை மூப்பன்களால் வெட்டி எடுக்கப்பட்டு பாலாம்பாள்புரம் கொண்டு வரப்பட்டது. பாலம்பாள்புரத்தில் உள்ள விநாயகர் கோயில் அருகே கம்பத்திற்கு வேப்பிலை சுற்றப்பட்டு, பக்தர்கள் தண்ணீர், பால் ஊற்றி, மஞ்சள், குங்குமம் இட்டு வழிப்பட்டனர்.

கம்பம் செல்லும் வழியில் கம்பத்திற்கு முன்பாக இளைஞர்கள் உற்சாக நடனமாடியவாறு சென்றனர். ஜவஹர் கடைவீதி வழியாக கரூர் மாரியம்மன் கோயிலுக்கு கம்பம் கொண்டு செல்லப்பட்டது. பாலம்பாள்புரத்தில் இருந்து மாரியம்மன் கோயில் வரை ஏராளமான பக்தர்கள் கம்பத்தை பின்தொடர்ந்து சென்றனர். மேலும். வழி நெடுகிலும் பக்தர்கள் சாலையோரம் காத்திருந்து கம்பத்தை தரிசித்து வழிப்பட்டனர். கம்பம் செல்லும் வழியில் கம்பத்திற்கு முன்பாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டம் கம்பம் கரூர் மாரியம்மன் கோயில் பரம்பரை அறங்காவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் கம்பத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்தை தரிசித்தனர். பக்தர்களுக்கு மோர், ஐஸ்க்ரீம், கம்பங்கூழ், உணவு, தண்ணீர் பாக்கெட் ஆகியவற்றை பலரும் வழங்கினர்.

தொடர்ந்து மாரியம்மன் கோயிலில் இருந்து கம்பம் மாலை அமராவதி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அமராவதி ஆற்றில் இருந்து கருப்பாயி கோயில் தெரு, ஜவஹர் கடைவீதி வழியாக மாரியம்மன் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டு கரூர் மாரியம்மன் கோயிலில் கம்பம் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.