கான்ட்ராக்டர் தற்கொலை வழக்கு பஞ்., உறுப்பினர்களிடம் விசாரணை| Dinamalar

உடுப்பி, : அரசு ஒப்பந்ததாரரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை வழக்கில், ஹிண்டல்கா கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.பெலகாவி அருகே உள்ள ஹிண்டல்காவைச் சேர்ந்தவர் சந்தோஷ் பாட்டீல், 35. அரசு ஒப்பந்ததாரான இவர், கடந்த மாதம் 12ல் உடுப்பி லாட்ஜில் தற்கொலை செய்து கொண்டார். ‘

கமிஷன் கேட்டு முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் அவரது உதவியாளர்கள் நெருக்கடி அளிப்பதால், தற்கொலை செய்து கொள்கிறேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ‘வாட்ஸ் ஆப்’பில் நண்பர்களுக்கு தகவல் அனுப்பி இருந்தார்.மேலும், தற்கொலைக்கு முன் டில்லி சென்று, ஈஸ்வரப்பா மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து மனு கொடுத்ததாகவும் கூறப்பட்டது. மேலும், அவர் டில்லியில் நிருபர்களை சந்தித்து பேசியுள்ளார். எனவே சந்தோஷுக்கு டில்லியில் உதவியது யார் என்பது குறித்து விசாரணை நடத்த, உடுப்பி போலீசார் டில்லி சென்றுள்ளனர்.இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக ஹிண்டல்கா கிராம பஞ்சாயத்து தலைவர் நாகேஷ் மொபைல் போனை, போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவரது மொபைல் போனில் உள்ள உரையாடல்களை ஆய்வு செய்ய உள்ளனர்.ஹிண்டல்கா கிராம பஞ்சாயத்தில் மொத்தம் 35 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவர்களிடம், உங்கள் வார்டில் சந்தோஷ் பாட்டீல் வளர்ச்சி பணிகளை செய்தாரா; செய்திருந்தால் எவ்வளவு மதிப்பிலான பணிகளை செய்தார்; அவரே பணிகளை செய்தாரா அல்லது துணை ஒப்பந்தத்தின்படி பணி செய்தாரா என்பது போன்ற தகவல்களையும் கேட்டு பெற உள்ளனர்.ஒவ்வொரு உறுப்பினரிடமும் ஒவ்வொரு நாள் விசாரணை நடக்க உள்ளது. பெண் உறுப்பினர்களிடம் பெண் போலீசார் விசாரிப்பர். சந்தோஷ் பாட்டீலிடம் 12 பேர் துணை குத்தகை பெற்றிருந்தனர். அவர்களிடம் வேலை செய்ததற்கான ஆவணங்கள், உபகரணங்கள் வாங்கியதற்கான பில் என அனைத்தையும் ஆய்வு செய்ய உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.