காளஹஸ்தி: குடும்ப பிரச்னையை தீர்ப்பதாக கூறி 16 வயது சிறுமியை போலி சாமியார்கள் 3 மாதமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார், போலி சாமியார்களை தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் மகாசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமசுப்பையா(55), பாஸ்கர்(60). இவர்கள் இருவரும் நள்ளிரவு நேரத்தில் அடிக்கடி பூஜை செய்வது வழக்கமாம். மேலும், நாங்கள் பூஜை செய்தால் உங்கள் அனைத்து பிரச்னைகளும் தீரும் என அப்பகுதி மக்களை நம்ப வைத்துள்ளனர். இந்த தகவல் பக்கத்து கிராமங்களுக்கும் பரவியது. இதை நம்பி பலர் வந்து பூஜை செய்துள்ளனர். இதற்காக கட்டணமும் வசூலித்து போலி சாமியார்கள் கொழுத்துப் போயிருந்திருக்கின்றனர். இந்நிலையில் அதேகிராமத்தை சேர்ந்த ஒருவர் குடும்ப பிரச்னை காரணமாக இவர்களை அணுகியுள்ளார். அவரிடம் ராமசுப்பையா, பாஸ்கர் ஆகிய இருவரும் ‘உங்களது 16 வயது மகளை நள்ளிரவு பூஜையில் ஈடுபட வைத்தால் பிரச்ைன அனைத்தும் தீர்ந்துவிடும்’ என தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய அவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தங்களது மகளை நள்ளிரவு பூஜையில் பங்கேற்க அழைத்து சென்றுள்ளார். அப்போது போலி சாமியார்கள் இருவரும் சிறுமியின் பெற்றோரிடம், இந்த பூஜையில் சிறுமி மட்டுமே பங்கேற்க வேண்டும். நீங்கள் வெளியே சென்றுவிடுங்கள் என்று கூறியுள்ளனர்.அதன்பிறகு தங்களிடம் தனியாக சிக்கிக்கொண்ட சிறுமியை பூஜை என்ற பெயரில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த சிறுமியிடம், இங்கு நடந்ததை வெளியே சொன்னால் உனது பெற்றோரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயமுறுத்தியுள்ளனர். இதனால் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இவ்வாறு 3 மாதங்களாக இருவரும் அந்த சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில் சிறுமி கடந்த 2 நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையறிந்த பெற்றோர் சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தததில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்கள் மகளிடம் கேட்டுள்ளனர். அப்போது ராமசுப்பையாவும் பாஸ்கரும் தன்னை 3 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்தனர் எனக்கூறி கதறி அழுதார்.இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், டக்கலி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து போலி சாமியார்களை தேடி வருகின்றனர்.