கேரளாவில் தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் பரவி வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவில் பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் அடிக்கடி ஏற்பட்டு மக்களை அச்சுறுத்துவது வழக்கம். தற்போது அங்கு மக்களை அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்படுத்தியுள்ளது தக்காளி காய்ச்சல். இந்த புதிய வகை வைரஸால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவது தெரிய வந்துள்ளது. தக்காளி காய்ச்சலால் பாதித்த ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொல்லம் மாவட்டத்தில் இதுவரை 85 குழந்தைகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தக்காளி காய்ச்சல் பாதிப்பால் பல்வேறு பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்த நோய் அறிகுறிகளுடன் குழந்தைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
தக்காளி காய்ச்சல் பரவலைத் தொடர்ந்து, ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நோய் தொடர்பாக மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், ஆனால் கவனமுடன் இருப்பது அவசியம் எனக்கூறி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
காய்ச்சலுடன் தோலில் சிவப்பு நிற திட்டுக்கள் ஏற்பட்டு எரிச்சல், வலியைத் தரும் பாதிப்பு தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், தக்காளிக்கும் இந்த காய்ச்சலுக்கும் தொடர்பில்லை என்பதுதான் விசித்திரம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM